ஒரு வேளை உணவுக்காக போராடியவர்; ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் பெண் நடிகை; முதல் வில்லியும் இவர் தான்!

பாலிவுட்டின் முதல் பெண் வில்லி நாதிராவின் வில்லி பயணம், ராஜ்கபூரின் 'ஸ்ரீ 420' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தொடஙிகியது.

பாலிவுட்டின் முதல் பெண் வில்லி நாதிராவின் வில்லி பயணம், ராஜ்கபூரின் 'ஸ்ரீ 420' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தொடஙிகியது.

author-image
WebDesk
New Update
Ndhith

இந்தி திரையுலகில் சில நடிகர்கள் தங்களுக்கென ஒரு தனி வழியை உருவாக்கி, பல காலமாய் இருந்த வழக்கங்களை உடைத்து, அடுத்து வரும் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறுகிறார்கள். அந்த வகையிலான ஒரு நடிகை தான் நாதிரா. ராஜ் கபூர் நடிப்பில் வெளியான 'ஸ்ரீ 420' திரைப்படத்தில் 'முட் முட் கே ந தேக்' பாடலில் அவரது வசீகரமான அசைவுகளையும், 'ஜூலி' திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கோபக்கார அம்மாவாக அவரது மிரட்டலான நடிப்பையும் யாரால் மறக்க முடியாது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Advertisment

1950-60 காலக்கட்டங்களில் வில்லியாக நடிக்க பல நடிகைகள் விலகி இருந்தபோதும், நாதிரா, பாலிவுட்டின் முதல் பெண் வில்லியாக உருவெடுத்து, அந்த கேரக்டருக்கு மரியாதையையும், நம்பகத்தன்மையையும் சேர்த்து அசத்தியவர். நாதிரா தன் உடலால் ஒரு படைப்பையே உருவாக்கினார். அது பின்னாளில் பல நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நாதிராவின் பின்னணி மற்றும் பாலிவுட் ஆரம்பம்

1932-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி பாக்தாத்தில் ஒரு யூத குடும்பத்தில் ஃபுளோரனஸ் இசிக்கல் (Florence Ezekiel) என்ற பெயரில் பிறந்தார். அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. நாதிரா தனது 10 - 11 வயதில், 1943ஆம் ஆண்டு 'மௌஜ்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இயக்குநர் மெஹ்பூப் கானின் மனைவி சர்தார் அக்தர் அவரைப் பார்த்தபோது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை, நிகழ்ந்தது. திலீப் குமார் நடித்த 'ஆண்' (1952) படத்தில் ஒரு ராஜபுத்திர இளவரசியாக நடிக்கும் வாய்ப்பை நாதிராவுக்கு கிடைத்தது. இது நாதிராவுக்கு ஒரு சிறப்பான அறிமுகமாக அமைந்தது.

முதல் வருமானத்தில் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய நாதிரா

Advertisment
Advertisements

இளமையில் பல கஷ்டங்களை அனுபவித்த நாதிராவுக்கு 'ஆண்' திரைப்படம் அவரது வாழ்க்கை முழுவதையும் மாற்றியது. ஒரு பழைய பேட்டியில் அவர், "1949-ல் 'ஆண்' படத்திற்காக மாதம் ரூ.1200 சம்பாதித்தேன். இரண்டாம் ஆண்டில் ரூ.2500 ஆகவும், மூன்றாம் ஆண்டில் ரூ.3000 ஆகவும் உயர்ந்தது. எனது முதல் மூன்று மாதத் தவணையாக ரூ.3600 கிடைத்தபோது, அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல பயமாக இருந்ததால், மெஹ்பூப்ஜியிடம் அவரது காரில் என்னை வீட்டில் இறக்கிவிட முடியுமா என்று கேட்டேன்!" என்று நினைவு கூர்ந்தார்.

அந்தப் பணத்தைப் பார்த்த அவரது தாய், அவர் திருடிவிட்டதாக நினைத்துள்ளார். "என் அம்மா அதைப் பார்த்து, 'நீ திருடிவிட்டாயா?' என்று கேட்டார்! நான் உடனே வெளியே சென்று, ஃபர்னிச்சர்களையும், 12 தங்க வளையல்களுடன் ஒரு முழு தங்க செட்டையும் வாங்கினேன். ஒவ்வொரு இரவும் அந்த வளையல்களை எண்ணி, துணியால் மூடிவிட்டு தூங்குவேன். காலையில் மீண்டும் எண்ணுவேன். அன்று நாங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் நன்றாகச் சாப்பிட்டோம். நிறைய உணவு வாங்கியதால், அதில் பாதியை அண்டை வீட்டாருக்குக் கொடுத்துவிட்டோம்" என்று 1999ஆம் ஆண்டு ஒரு பழைய பேட்டியில் கூறினார்.

ராஜ்கபூரின் 'ஸ்ரீ 420' ஒரு திருப்புமுனை

'ஆண்' திரைப்படத்திற்குப் பிறகும், நாதிராவிற்கு முன்னணி கதாநாயகி வாய்ப்புகள் இல்லாததால், துணை வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், ராஜ்கபூரிடமிருந்து வந்த ஒரு அழைப்பு அவரது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. கதாநாயகி ஆக வேண்டும் என்ற நாதிராவின் கனவு நிறைவேறாத நிலையில், ராஜ்கபூரின் 'ஸ்ரீ 420' படத்தில் ஒரு வில்லி கேரக்டரில நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். அந்தக் காலத்தில், எல்லா இளைஞர்களைப் போலவே, ராஜ்கபூருடன் பணியாற்ற வேண்டும் என்று நாதிராவும் கனவு கண்டார். கிடைத்த வாய்ப்பை அவர் மறுக்கவில்லை. அந்த படத்தில் அவர் நடித்த 'மாயா' கேரக்டர் மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள்

'ஸ்ரீ 420' படத்திற்குப் பிறகு, நாதிரா கிட்டத்தட்ட 200 படங்களை நிராகரித்தார். ஏனெனில், தயாரிப்பாளர்கள் அவருக்கு வில்லி கேரக்டகளையே தொடர்ந்து கொடுத்துள்ளனர். ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவருக்கு வேறு வழி இல்லாமல் நடிக்க தொடங்கியுள்ளார். "ஸ்ரீ 420 படத்திற்குப் பிறகு, நான் ஒன்றரை வருடம் பட்டினி கிடந்தேன். ஏனென்றால், அனைவரும் நான் அதே கருப்பு உடையில், அதே போல சிகரெட்டைப் பிடித்தபடி நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்" என்று நாதிரா கூறினார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய முதல் இந்திய நடிகை

நாதிரா தனது திரை வாழ்வில் சுமார் 73 படங்களில் நடித்துள்ளார். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த அவர், விலை உயர்ந்த மதுபானங்களை விரும்புவார். கார்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் இந்தியாவின் முதல் நடிகராக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார்.

தனிமையில் வாழ்ந்த நாதிரா, திருமணம் செய்து கொள்ளவில்லை

ஷாருக் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோஷ்' (2000) திரைப்படம் நாதிராவின் கடைசித் திரைப்படமாகும். அதன்பின், நாதிரா தனது குடும்பத்துடன் மும்பையில் வாழ்ந்தார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது குடும்பம் வெளிநாடுகளுக்குச் சென்றபோது, மும்பையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்தார். ஒரு பேட்டியில், அவருக்கு தூக்கமின்மை நோய் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

ஏதேனும் வருத்தங்கள் இருக்கிறதா என்று கேட்டபோது, " இல்லை. கடவுள் எனக்கு அளித்த எல்லாவற்றுக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன். சில சமயங்களில் நான் தனியாக இருப்பதனால் அழுவேன். ஆனால், வாழ்க்கையில் எல்லாமே கிடைக்காது என்று நினைக்கிறேன். எனக்கு தூக்கமின்மை இருப்பதால் மற்றவர்களை விட எனக்கு அதிக நேரம் இருக்கிறது. பேச யாரும் இல்லாததால், வேலை இல்லாத நேரங்களில் இசைக் கேட்பேன், புத்தகங்களைப் படிப்பேன்.

நான் உயிருடன் இருக்கும்வரை, வேலை செய்வதற்குப் போதுமான உடல் ஆரோக்கியத்துடன் என்னை வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் நான் கடவுளிடம் கேட்கிறேன். என் வாழ்வில் ஒருபோதும் நான் யாரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார். தனது இறுதி நாட்களில், நாதிரா காசநோய், கல்லீரல் கோளாறு மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களால் அவதிப்பட்டார். நீண்ட கால நோய்க்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு தனது 73ஆவது வயதில் மரணமடைந்தார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: