நடிகர் நாக சைதன்யா அண்மையில் வம்ஷி குரபதியிடம் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது சமந்தாவுடனான விவாகரத்து, அதனால் சமூக வலைதளங்களில் பரப்பட்ட தகவல்கள் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Naga Chaitanya says he was ‘treated like a criminal’ after divorce from Samantha: ‘I come from a broken home…’
அப்போது, "தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தோம். இதைத் தவிர வேறு என்ன விளக்கத்தை நாங்கள் அளிக்க வேண்டும்?. பொதுமக்களும், ஊடகங்களும் எங்களது தனியுரிமைக்கு மதிப்பு அளிப்பார்கள் என நாங்கள் நம்பினோம். ஆனால், எங்கள் விவாகரத்தை தலைப்புச் செய்தியாக்கி, பல்வேறு வதந்திகளை பரப்பி அதனை ஒரு பொழுதுபோக்காக மாற்றினர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதையும் செய்தியாக்குகின்றனர். நாங்கள் விவாகரத்து பெற்று இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், என்னை தூண்டும் விதமாக கேள்விகள் எழுப்பி அதில் இருந்து ஏதாவது பதில் கிடைக்காதா என எதிர்பார்க்கின்றனர். இதில் இருந்து நானும், சமந்தாவும் கடந்து விட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை கொண்டுள்ளோம். நடந்தவை அனைத்தும் எங்கள் நல்லதுக்காக தான் அமைந்தது. இதை நான் பல முறை கூறிய பின்னர், மீண்டும் மீண்டும் இக்கேள்வி என்னைத் துரத்திக் கொண்டு இருக்கிறது. நான் எழுதாத வாக்கியத்திற்கு என்னால் எப்படி முற்றுப்புள்ளி வைக்க முடியும்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக செயல்படுபவர்கள் வேறு ஏதாவது நல்ல காரியங்கள் செய்வதில் ஈடுபடலாம் என நாக சைதன்யா அறிவுறுத்தியுள்ளார். "முந்தைய திருமணத்தில் இருந்து நான் மீண்டு விட்டேன். தற்போது வலிமை அடைந்து மீண்டும் எனக்கான காதலை நான் கண்டறிந்தேன். மற்றவர்கள் வாழ்வில் நடக்காத நிகழ்வு ஒன்றும் என் வாழ்வில் நடந்துவிடவில்லை. பிறகு ஏன் ஒரு குற்றவாளியை போல் நான் நடத்தப்படுகிறேன்?" என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.
நாக சைதன்யாவின் பெற்றோரான, நடிகர் நாகார்ஜுனா மற்றும் லட்சுமி டக்குபதி ஆகியோர், அவர் குழந்தையாக இருந்த போது பிரிந்து சென்று பின்னர் மருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில், "மனமுறிவு என்றால் என்ன என்று தெரிந்த குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன், அதைப் பற்றி குறைந்தது 1000 முறை நான் யோசிப்பேன். ஏனெனில், அவை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என எனக்கு தெரியும். விவாகரத்து என்பது இருவரின் சம்மதத்துடனும் எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் இருவரும் அவரவர் பாதையில் சென்று விட்டோம். இது நடந்ததில் எனக்கு வருத்தம் தான். எனினும், வேறு வழி இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதி, கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் தங்கள் பிரிவை அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை, நாக சைதன்யா மணந்து கொண்டார்.