Namma Veettu Pillai Review: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், சூரி, யோகிபாபு, நட்டி, ஆர்.கே. சுரேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அர்ச்சனா, வேல ராமூர்த்தி, சண்முகராஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனை முதன் முதலில் ஹீரோவாக வைத்து படம் இயக்கியவர், இயக்குநர் பாண்டிராஜ். அந்த வகையில், “மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா” ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குனர் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் தான் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. ”வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல்” போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்திருந்த படமும் கூட.
உறவுகளை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனும், ஐஸ்வர்யா ராஜேஷும் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். இவர்கள் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை என்றாலும், கிளைமேக்ஸில் அனைவரின் கண்களையும் பதம் பார்த்து விடுகிறார்கள்.
அருள்மொழி வர்மனின் (பாரதிராஜா) பேரன் தான் அரும்பொன் (சிவகார்த்திகேயன்). சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து விடுகிறார் அரும்பொன். அருள்மொழி வர்மனின் மற்ற மகன்கள் அரும்பொன்னின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து (ஐஸ்வர்யா ராஜேஷ்) துளசியின் திருமணத்தில் ஏற்படும் பிரச்னை, அரும்பொன்னை பெரும் சிக்கலில் தள்ளுகிறது. அதிலிருந்து மீண்டு, தன் தங்கையின் வாழ்வை அரும்பொன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதிக் கதை.
இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கியிருந்த ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படமும் கிராமத்துப் பின்னணியில், உறவுச் சிக்கலை மையப்படுத்திய படம் என்பதாலும், நாயகனுக்கு இருக்கும் நீண்ட வசனங்களும், காமெடி நடிகர் சூரியும் நம்ம வீட்டுப் பிள்ளையில் முக்கிய அங்கம் வகிப்பதால், ஏற்கனவே பார்த்த சுமாரான படத்தை மீண்டுமொரு முறை பார்ப்பதைப் போல் சலிப்பு ஏற்படுகிறது.
ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து, அதில் சரியான வெற்றி பெற முடியாத சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் பொறுப்பான குடும்பத்து பையனாக தன்னைக் காட்டிக் கொள்ள ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரமே ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்பதால், அவரது திரை வாழ்க்கையில் துளசி கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி ஹீரோயின் அனு இம்மானுவேலுக்கு படத்தில் பெரிதாக வேலை ஏதும் இல்லை.
சினிமா பாணியில் சீரியலை ரசிப்பவர்களுக்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளையை’ நிச்சயம் பிடிக்கும்.