/indian-express-tamil/media/media_files/2024/11/06/bfiRVHHhSwYZ3H8dST9L.jpg)
கத்துக்கிட்டு பாடுடா... என் காதுல ஆயிரம் ஊசி இறங்குது; பிரபல நடிகருக்கு புத்தி சொன்ன எஸ்.பி.பி!
எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் இருந்த காலம் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என 3 தலைமுறைகளுக்கு பாடிய பாடும் நிலா எஸ்.பி.பி. என்றால் அது மிகையல்ல. அவர் மறைந்தாலும் இன்னும் அவரது குரல் பாடல்களாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
மணிகண்டன் தனது 'நரை எழுதும் சுயசரிதம்' படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார். அந்தப் படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்க்க எஸ்.பி.பி. வந்திருந்திருக்கிறார். படம் முடிந்து வெளியே வந்த எஸ்.பி.பி., "யார் அந்தப் பாடலைப் பாடியது?" என்று கேட்க, மணிகண்டன் ஆவலுடன் "சார், நான்தான் பாடினேன்" என்று பதிலளித்துள்ளார். உடனே எஸ்.பி.பி., மணிகண்டனின் பின்னங்கழுத்தைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "பாடு கத்துக்கிட்டு பாடு. யார் வேணாலும் பாடலாம், புரியுதா? ஆனா பாட்டு பாடறதுன்னா என்னன்னு கத்துக்கிட்டு பாடு. கேட்கறதுக்கு அவ்வளவு மோசமா இருக்குது" என்று கண்டிப்பான குரலில் கூறியிருக்கிறார். எஸ்.பி.பி.யின் இந்த வார்த்தைகளைக் கேட்டு மணிகண்டன் அவமானத்தில் கூனி குறுகிவிட்டதாக அண்மையில் நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தான் கானா பாடல் என்பதால் அப்படித்தான் பாடினேன் என்று மணிகண்டன் விளக்க முயற்சித்தபோது, எஸ்.பி.பி. "கானா பாட்டுன்னா அதுல ஸ்ருதி இருக்கக் கூடாதுன்னு யாராவது உன்கிட்ட சொன்னாங்களா? நான் பாடி இருக்கேன்டா கானா பாட்டு" என்று கூறினார். எஸ்.பி.பி. சொன்ன மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், "உனக்கு ஒரு விஷயம் தெரியலேன்னா அதை கத்துக்கிட்டு பண்ணு" என்பதுதான். இந்த சம்பவம் நடந்த பிறகு, வீட்டில் சும்மா இருக்கும்போது ஹம் செய்தால் கூட எஸ்.பி.பி. தனது கண் முன் தோன்றுவதாக மணிகண்டன் கூறியுள்ளார்.
மணிகண்டனை தான் காயப்படுத்திவிட்டோமோ என்று நினைத்து, அவரை சகஜமாக்குவதற்காக, "உன் பேர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். மணிகண்டன் "மணிகண்டன்" என்று சொல்ல, "நானும் மணிதான்டா, பாலசுப்ரமணி" என்று சொல்லி சிரித்திருக்கிறார். இறுதியாக, "நான் சொன்னதை சீரியஸா எடுத்துக்கோ, மியூசிக் கத்துக்கோ" என்று அறிவுரை கூறி, தனது ஆசீர்வாதத்தையும் வழங்கியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.