கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு - கோடம்பாக்கம் ஏன் பதறுகிறது? 

வீட்டு மொட்டை மாடியில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதற்கே மதியத்துக்கு மேல்தான் தரிசனம் தந்திருக்கிறார். 

நேற்று வெளியான ஒரு செய்தியும், புகைப்படமும் ஐயோ பாவம் என்று பலரையும் ‘உச்’ கொட்ட வைத்திருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு என்பதுதான் அந்த செய்தி. புகைப்படத்தில் சிம்புவும், கார்த்திக் நரேனும் ஒன்றாக இருக்கிறார்கள்.

2016 இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் நான்லீனியர் திரைக்கதையும், மேக்கிங்கும் அனைவரையும், யார்ரா இது என திரும்பிப் பார்க்க வைத்தது. படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுக்கு வயது 21 என்பது ஆச்சரியத்தை பலமடங்காக்கியது. மணிரத்னம், கௌதம் ஆகியோர் வியந்து கார்த்திக் நரேனை பாராட்டினார்கள்.

கார்த்திக் நரேன் தனது அடுத்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெயின்மெண்டுக்காக இயக்குகிறார் என்ற போது, தம்பிக்கு அனுபவம் பத்தலை, இப்படி வாலன்ட்ரியா போய் வம்புல சிக்குகிறாரே என்று கவலைப்பட்டனர். பலர் நேரடியாகவே கார்த்திக் நரேனிடம், கௌதம் வேண்டாம் என்று எச்சரித்தனர். காரணம் அனைவரும் அறிந்தது.

ஒரு படத்தின் பணத்தை இன்னொன்றில் முதலீடு செய்வது. அந்த இன்னொன்றை காட்டி வேறெnன்றை தொடங்குவது என்று கௌதம் தமிழ் சினிமாவில் ஒருவகை சூதாட்ட தயாரிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் தயாரித்த தங்கமீன்கள், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என எந்தப் படமும் சரியான நேரத்தில் திரைக்கு வந்ததில்லை. இரண்டு மூன்று வருடங்கள் பெட்டிக்குள் முடங்கி புராதன வாசனையுடனே வெளிவரும். அவரிடம் போய் வளர வேண்டிய பையன் வம்படியாக மாட்டிக் கொண்டாரே என்பதே அனைவரது கவலையாகவும் இருந்தது.

கௌதம் ஏமாற்றவில்லை. அதாவது கவலைப்பட்டவர்களை. அவர்கள் நினைத்தது போல், நரகாசூரனை கைகாட்டி பலரிடம் பைனான்ஸ் வாங்கி பாதியில் நிற்கும் தனது துருவநட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் முதலீடு செய்தார். பலருக்கும் சம்பளம் தரவில்லை. முக்கியமாக நரகாசூரனின் நாயகன் அரவிந்த்சாமிக்கு. ஒருகட்டத்தில் கார்த்திக் நரேனே டப்பிங் பேச வேண்டாம் என்று அரவிந்த்சாமியை தடுக்கும் அளவுக்கு கௌதமின் குடைச்சல்கள் அதிகமாகி இறுதியில் சமூகவலைத்தளங்களில் இருவரும் அடித்துக் கொண்டனர். செப்டம்பர் 16, 2017 படப்பிடிப்பை தொடங்கி 41 நாள்களில் நரகாசூரனை கார்த்திக் நரேன் முடித்தும் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்காகத்தான், ‘தம்பி போய் கௌதம்கிட்ட மாட்டிக் கொண்டாரே’ என திரையுலகம் கவலைப்பட்டது.

கௌதமுக்கு எந்தவகையிலும் சளைத்தவரல்ல சிம்பு. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, வந்தாலும் டிமிக்கி கொடுத்து கிளம்புவது என்று சிம்புவின் லீலைகள் உலகப் பிரசித்தம். கடைசியாக அவர் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பில் அவர் கொடுத்த குடைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று வேடங்களில் இரண்டில் மட்டுமே நடித்தார். அதுவும் அரைகுறையாக. கேட்டதற்கு, எடுத்ததை வைத்து முதல் பாகம் என்று வெளியிடுங்கள், எடுக்க வேண்டியதை இரண்டாம் பாகமாக வெளியிடலாம் என்றிருக்கிறார். பிறகு அரைகுறையாக எடுத்ததை முதல்பாகம் என வெளியிட்டு 18 கோடிகள் கடன்பட்டார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

படப்பிடிப்புக்கு காலை பத்து மணிக்கே அனைவரும் வந்து காத்துக் கொண்டிருந்தால், சிம்பு மட்டும் வரமாட்டார். அப்படியே வந்தாலும் மாலை மூன்று மணிக்கு வந்து, மூட் சரியில்லை என்று மூன்றரைக்கு கிளம்புவார். வெளியே படப்பிடிப்பு வைத்தால்தானே டிமிக்கிக் கொடுக்கிறார் என்று ஒருமுறை அவரது வீட்டு மொட்டை மாடியில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அதற்கே மதியத்துக்கு மேல்தான் தரிசனம் தந்திருக்கிறார்.

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் சொதப்பாமல் நடித்தார் என்பதற்காக சிம்பு மாறிவிட்டார் என பலரும் பாராட்டுகிறார்கள். டிமிக்கி கொடுப்பதில் சிம்புவுக்கே சீனியர் நவரச நாயகன் கார்த்திக. அவரை வைத்தே படம் செய்த மணிரத்னத்துக்கு சிம்புவை வேலை வாங்குவது பெரிய விஷயமில்லை. அதை வைத்து சிம்பு திருந்திட்டார் என்பது தவறான முடிவு என்பது கோடம்பாக்கத்தில் பெரும்பாலானவர்களின் கணிப்பு. அதனால்தான், கார்த்திக் நரேனின் படத்தை கௌதம் தயாரிக்கிறார் என்றபோது கதறியது போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு என்கிற போதும் கதறுகிறார்கள்.

கார்த்திக் நரேனின் காதில் இந்த சமாச்சாரம் விழுமா?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close