சில நடிகர், நடிகைகள் நீண்ட காலமாக வெளிச்சத்தில் இருந்து விலகி இருந்தாலும் பார்வையாளர்களின் மனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் பழம்பெரும் நடிகையாக அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையான நடிகையான அர்ச்சனா, நிரீக்ஷனா (தெலுங்கு) தாசி (தெலுங்கு) மற்றும் வீடு ஆகிய என மூன்றுமுறை தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல் ஒன்பது ரூபாய் நோட்டு படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.
கடைசியாக தமிழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான அழியாக கோலங்கள் 2 என்ற படத்தில் நடித்திருந்த அர்ச்சனா தற்போது முதல்முறையாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சி என்ற முக்கிய கேரக்டரில் அர்ச்சனா நடித்து வருகிறார்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது கேரியரில் சுமார் 35 திரைப்படங்களில் நடித்துள்ள அர்ச்சனா, வலிமையான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து அதில் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் மூன்று மகள்களின் அம்மாவாக தன்னம்பிக்கை மிகுந்த தாய் கேரக்டரில் நடிக்க உள்ளது ஆச்சரியமில்லை.
மீனாட்சி மற்றும் அவரது மூன்று மகள்களான யமுனா, சக்தி மற்றும் துர்கா ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி ஒரு எளிய பெண்மணி, அவர் தனது மகள்களை தானே வளர்த்து வருகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்காததால் கணவர் அவரை கைவிட்டு விட்டார்.
இதனால், அவரது வாழ்க்கை அவரது மூன்று மகள்களைச் சுற்றியே சுழலத் தொடங்குகிறது. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கும் தனது மகள்களுடன் சேர்ந்து, நிலையான வருமானம் ஈட்டுவதற்காக ‘மீனாட்சி மெஸ்’ என்ற சிறிய உணவகத்தை நடத்துகிறார். அவர் தன் பிள்ளைகளுக்கு தைரியம் கொடுப்பதோடு, அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க கடினமாக உழைக்கிறார். ஒவ்வொரு தாயையும் போல, தன் மகள்களுக்கு திருமணம் செய்துவைத்து, அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் இவரது மிகப்பெரிய கனவு.
பிரபல நட்சத்திரங்களான காயத்ரி யுவராஜ் யமுனாவாகவும் , மோக்ஷிதா ஹீரோயின் சக்தியாகவும் மற்றும் பிரணிகா தக்ஷு துர்கா என்ற கதாபாத்திரத்தில் மீனாட்சியின் மகள்களாக நடிக்கின்றனர், அதே சமயம் ஹீரோவாக வெற்றி கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான ஆர்யன் நடிக்கிறார்! மீனாட்சி தனது குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவதற்கும் எப்படி எல்லா தடைகளையும் எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் மையக்கரு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“