ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்த குற்ற உணர்ச்சியில் இருந்து இன்னும் தான் மீளவில்லை என்று அந்த படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் பேட்ட, ரஜினிகாந்த், த்ரிஷா இணைந்த முதல் படம், மாளவிகா மோகனன், இந்தி நடிகர் நாவசுதீன் சித்திக் தமிழில் அறிமுகமான படம், சசிகுமார் ரஜினிகாந்துடன் நடித்த படம் என பல சிறப்புகள் இந்த படத்திற்கு உண்டு. அனிருத் இசையில், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில், கோழையான ஒரு ஆளாகவும், பின்னாளில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வில்லனாக நடித்தவர் தான் நவாசுதீன் சித்திக். இந்த படத்திற்கு பின் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத நிலையில், சமீபத்தில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான சைந்தவ் படத்தில் நடித்திருந்தார். சங்கராந்தியை முன்னிட்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தத.
இந்த படம் இந்தியில் வெளியாக உள்ள நிலையில், தனது முதல் தெலுங்கு படமான சைந்தவ் படத்தின் புரமோஷன் பணிகளில் நவாசுதீன் சித்திக் பிஸியாக உள்ளார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், பேட்ட படத்தில் நடித்தபோது எனது முழு ஒத்துழைப்பையும் அந்த படத்திற்கு கொடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் படத்தின் வசனத்திற்காக அர்த்தத்தை புரிந்துகொள்ள முயற்சித்ததாகவும், வெறும் உதட்டசைவை மட்டும் வைத்து நடித்ததால் தற்போது குற்றஉணர்ச்சியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கலாட்டா பிளஸிடம் பேசிய நவாசுதீன் சித்திக், “ரஜினி சாருடன் பேட்ட படத்தில் நடித்தபோது, படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு, நான் என்ன செய்தேன் என்று தெரியாமல் ஒரு விஷயத்திற்கு பணம் வாங்குகிறேன் என்று நினைத்ததால், மிகுந்த குற்ற உணர்ச்சியில் இருந்தேன். நான் அவர்களை முட்டாளாக்கிவிட்டேன் என்று நினைத்தேன், ஏனென்றால் நான் வசனங்கள் புரியாமல் உதட்டளவில் தான் ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கு அங்கு பல விஷயங்கள் புரியவில்லை.
என்னால் நிறைய வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் நான் அந்த படத்தில் நடித்தேன். அதற்குப் பிறகும் இந்த படத்திற்காக நம்மை பாராட்டினால், ஒளிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மேலும் முழு ஒத்துழைப்பு இல்லாமல் சம்பளம் வாங்கியது பண மோசடி செய்தது போன்ற உணர்வை கொடுத்தது. அதற்காக எனக்கு நிறைய குற்ற உணர்வு இருக்கிறது.
இதனாலேயே சைந்தவ் படத்தில் நான் எல்லாவற்றையும் செய்தேன். நான் சொந்தமாக டப்பிங் பேசியிருக்கிறேன். நான் பேசிய ஒவ்வொரு வசனத்தின் அர்த்தத்தையும் புரிந்துகொண்டேன். அதனால், என் குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்தது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“