Vidhya Pradeep: தமிழ் சீரியல் உலகைப் பொறுத்தவரை, சன் டிவி எப்போதுமே முன்னணியில் இருக்கும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும், அதில் வரக் கூடிய கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்திருக்கிறார் ‘நாயகி’ சீரியலின் ‘ஆனந்தி’.
Advertisment
வித்யா பிரதீப்
ஆனந்தியின் உண்மையானப் பெயர் வித்யா பிரதீப். கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். டி.வி, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் பல்வேறு விளம்பரங்களில் மாடலாக பணியாற்றிய வித்யா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ராவ்னாக்’ ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள “ஆ பி ஜா” என்ற மியூஸிக் வீடியோவில் நடிகை யமி கெளதம் உள்ளிட்ட மாடல்களுடன் இடம்பெற்றிருந்தார்.
வித்யாவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் ஏ.எல் விஜய் தான். அவர் இயக்கிய ‘சைவம்’ படத்தில், பேபி சாராவுக்கு அம்மாவாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் வித்யா. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடுத்தர வயது பெண்மணி போலத் தெரிய வேண்டும் என்ற இயக்குநரின் தேவைக்கு ஏற்ப, உடலை வெயிட் போடச் செய்திருக்கிறார். குடும்பப் பின்னணியில் அமைந்த அந்தப் படம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ‘அதிபர்’ படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக நடித்த வித்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ’பசங்க 2’ படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘அச்சமின்றி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ’களரி’, ‘மாரி 2’, ’தடம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.
நாயகி சீரியலில் நடித்து வந்த விஜய லட்சுமி, அதிலிருந்து விலகி கடந்த வருடம் பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். அதனால் அவர் நடித்து வந்த ஆனந்தி கதாபாத்திரம் வித்யாவுக்குச் சென்றது. தற்போது சின்னத்திரை ரசிகர்களை அந்தக் கதாபாத்திரம் கட்டிப் போட்டிருக்கிறது.
கண் ஆராய்ச்சி குழு சந்திப்பில் வித்யா...
நடிப்பது மட்டும் தான் வித்யாவின் முழுநேர வேலை என நினைத்துவிட வேண்டாம். உண்மையில் வித்யா ஒரு சைன்டிஸ்ட்! ஆம், பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் முடித்த வித்யா பிரதீப், சென்னையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் பி.எச்.டி. முடித்திருக்கிறார். ஆராய்ச்சி விஞ்ஞானியாக, ஸ்டெம் செல் உயிரியலில் அவர் பணிபுரிகிறார். வித்யாவின் பணி ”இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் செல் தெரபி”யில் வெளியிடப்பட்டுள்ளது!