Advertisment

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா சினிமாவில் நிலைத்திருப்பது எப்படி?

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மூவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஒன்றோ, இரண்டோ படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். அதிகபட்சம் சிலருடன் மூன்று படங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anushka - nayantara - tirisha

ஜான் பாபுராஜ்

Advertisment

60 வயதை கடந்தவர்கள் முன்னணி நடிகர்களாக, 20 வயது நடிகைகளுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கையில், 30 வயதுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பதை ஆச்சரியமாக குறிப்பிட வேண்டிய நிலையில்தான் இந்திய சினிமா உள்ளது.

16 வயதில் சினிமாவில் நுழையும் பெண்கள் பத்து வருடங்கள் நாயகியாக தாக்குப் பிடிப்பதே கடினம். த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயது கடந்தும் இன்னும் முன்னணி நடிகைகளாக திகழ்கின்றனர். இவர்கள் மூவரும் சினிமாவில் பத்து வருடங்களை கடந்துவிட்டனர். த்ரிஷா, நயன்தாரா 15 வருடங்களை நிறைவு செய்துவிட்டனர். தென்னிந்திய மொழி சினிமாவில் இதுவொரு சாதனை. இதனை அவர்களால் எப்படி சாதிக்க முடிந்தது என்பதை அறிய, நடிகைகளால் ஏன் அதிக வருடங்கள் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா, "ஒரு நடிகையின் திறமையை அவர்கள் எந்த நடிகருடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்கிறார்கள்" என்றார். இதனை இன்னும் சரியாகச் சொன்னால், 'எந்த நடிகர்களுடன் நடிக்கிறார்கள் என்பதை வைத்தே அவர் முன்னணி நடிகையா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது.' உதாரணமாக ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் யார் இணைந்து நடிக்கிறார்களோ அவர்களே அந்த காலகட்டத்தின் முன்னணி நடிகை.

actress nayantara 1 அறம் படத்தில் நடிகை நயன்தாரா

ரஜினி 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். அஜித், விஜய் 25 வருடங்களுக்கும் மேலாக. இவர்கள் ஒரு நடிகையுடன் ஐந்து படங்களில் இணைந்து நடித்தாலே அபூர்வம். ஒரே நடிகையுடன் பல படங்களில் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு போரடித்துவிடும் என்று தயாரிப்பாளர்கள் முதல் கேன்டீனில் பாப்கார்ன் விற்பவர்வரை கருதுகிறார்கள். இதன் காரணமாக 16 வயதில் நடிகையாக உள்ளேவரும் ஒருவர் அடுத்த ஐந்து வருடங்களில் முன்னணி நடிகர்களால் தள்ளி வைக்கப்படும் நிலை உருவாகிறது. அதன் பிறகு அக்கா, அண்ணி, அம்மா என்றேn, நகைச்சுவை நடிகையாகவோதான் அவர்களால் சினிமாவில் தொடர முடிகிறது.

இந்த நெருக்கடியிலிருந்து ரேவதி, ரோகிணி, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், சிம்ரன், குஷ்பு போன்ற சென்ற தலைமுறை நடிகைகளால் மீள முடியவில்லை. 1989 இல் வருஷம் 16 படத்தில் புயலாக நுழைந்த குஷ்பு பத்து வருடங்கள் முடிவதற்குள் தன்னை தக்க வைத்துக் கொள்ள பாண்டியராஜன், நெப்போலியன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய நிலை உருவானது.

அழகும் திறமையும் உள்ள நடிகைகளுக்கே இதுதான் நிலை எனும் போது இந்த நெருக்கடியை கடந்து நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மூவரும் முன்னணி நடிகைகளாக நீடிப்பது ஆச்சரியமானது. இது எப்படி அவர்களால் சாத்தியமானது?

இவர்கள் மூவரின் சினிமா கரியரை கவனித்தால் ஒரு உண்மையை அறிந்து கொள்ளலாம். ஒரு கட்டத்துக்கு மேல், இவர்கள் மூவரும் தங்களையே ஒரு ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார்கள். அதாவது நாயகன் இல்லாத நாயகி மையப்படங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

actress tirisha 1 நாயகி படத்தில் நடிகை த்ரிஷா

சினிமா வர்த்தகம் என்பது எப்போதும் நாயகனை மையப்படுத்தியது. அதனால் எவ்வளவு பெரிய நாயகனின் படத்தில் நடித்தாலும், எத்தனை கோடிகள் சம்பளமாக வாங்கினாலும் நடிகையின் சந்தை மதிப்பு சினிமா வர்த்தகத்தைப் பொறுத்தவரை பூஜ்ஜியமாகவே கருதப்படும். துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நயன்தாரா நடித்திருந்தாலும் அப்படத்தின் வெற்றி சதவீதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது. ஹீரோவை சார்ந்திருக்கும்வரையில் ஒரு நடிகைக்கு எத்தனை திறமையிருந்தாலும் வர்த்தக அளவில் அவர் ஒரு பொருட்டேயில்லை.

2005 இல் தெலுங்கு சினிமாவில் நுழைந்த அனுஷ்கா முதலில் நாயகனுடன் டூயட் பாடும் நடிகையாவே இருந்தார். 2006 இல் அவர் ரெண்டு படத்தில் நடித்த போது யாருக்கும் அவரை தெரியவில்லை. அடுத்தடுத்த படங்களும் அமையவில்லை. 2009 இல் அருந்ததி என்ற நாயகி மையப் படமே அனுஷ்காவை தென்னிந்தியாவில் பிரபலப்படுத்தியது. அந்த வெற்றிக்குப் பிறகே வேட்டைக்காரன், சிங்கம் என்று தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பாகுபலி இரு பாகங்களிலும் பிரபாஸுக்கு இணையாக அவர் பேசப்பட்டார். அனுஷ்காவை நம்பி 50 கோடி செலவளிக்கலாம் என்ற நம்பிக்கையால் ருத்ரமாதேவி படத்தை குணசேகர் எடுத்தார். அதையடுத்து சைஸ் ஸீரோ படத்தில் அனுஷ்கா நடித்தார். ஆர்யா இருந்தாலும் அனுஷ்காவை நம்பி எடுக்கப்பட்ட படம் அது. சமீபத்தில் வெளிவந்த பாக்மதி சென்னையில் நாச்சியார் படம் அளவுக்கு வசூலித்தது என்றால் நாயகன் இல்லாமலே அனுஷ்காவால் ஒரு படத்தை ஓட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர் உருவாக்கிக் கொண்டதேயாகும்.

அனுஷ்காவுக்கு இரண்டு வருடங்கள் முன்பு 2003 இல் சினிமாவில் நுழைந்த நயன்தாராவும் ஒருகட்டம்வரை நாயகனை சார்ந்திருக்கும் படங்களில் மட்டுமே நடித்தார். 2014 இல் கஹானி இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் அவர் நடித்ததே அவரது முதல் நாயகி மையப்படம். அனாமிகா என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தை நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியிட்டனர். தமிழ், தெலுங்கில் படம் தோல்வியடைந்தது. எனினும் மனம் தளராமல் அடுத்த வருடம் 2015 இல் மாயா என்ற ஹாரர் படத்தில் நடித்தார். அதில் நாயகன் நாயகி எல்லாம் நயன்தாராதான். படம் ஹிட். நயன்தாராவால் தனியாக ஒரு படத்தை ஓட வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட டோரா, அறம், கொலையுதிர்காலம், கோலமாவு கோகிலா என்று தொடர்ச்சியாக படங்கள் குவிந்தன. அனைத்துமே நாயகி மையப்படங்கள். இவை தவிர மேலும் சில நாயகி மையப் படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளார். அஜித், பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் இணைந்து நடிக்கிற வாய்ப்புகளும் வருகின்றன. நாயகனின் துணையில்லாமல் ஒரு வர்த்தகத்தை நயன்தாரா உருவாக்கிக் காட்டியதே அவர் இன்றும் நிலைநிற்பதற்கு பிரதான காரணம்.

நாயகி மையப்படம் என்ற வகைமைக்குள் இந்த மூவரில் கடைசியாக நுழைந்தவர் த்ரிஷா. படங்கள் இன்றி கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் நாயகி என்ற படத்தில் நடித்தார். அது த்ரிஷாவின் முதல் நாயகி மைய திரைப்படம். படம் தோல்வி. 2017 இல் அவருக்கு படமேயில்லை. எனினும் ஹீரோ இல்லாமல் த்ரிஷாவை வைத்து படமெடுக்க முடியும் என்ற நம்பிக்கை மோகினி, 1818, கர்ஜனை, பரமபத விளையாட்டு என நான்கிற்கும் மேற்பட்ட நாயகி மையப் படங்களை அவருக்கு தந்தது. 96, சதுரங்க வேட்டை 2 போன்ற வேறு சில படங்களும் கைவசம் உள்ளன. மலையாளத்தில் அவரது நடிப்பில் இந்த வருடம் வெளியான ஹேய் ஜுட் வெற்றியடைந்தது. இந்த வருடம் வெளியாகவிருக்கும் படங்கள் த்ரிஷாவின் மார்க்கெட்டை மேலும் பலப்படுத்த வாய்ப்புள்ளது.

actress anushka shetty 1 அருந்ததி படத்தில் நடிகை அனுஷ்கா

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா மூவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகர்களுடன் ஒன்றோ, இரண்டோ படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். அதிகபட்சம் சிலருடன் மூன்று படங்கள். இவர்கள் அந்த முன்னணி நடிகர்களை மட்டும் நம்பியிருந்திருந்தால் பாண்டியராஜன், நெப்போலியன் என்று இரண்டாம்கட்ட நடிகர்களை நோக்கி குஷ்பு சரிந்தது போல் இவர்களும் சரிந்திருப்பார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்றியது நாயகி மையப்படங்கள். அந்தப் படங்கள் அவர்களுக்கு தனியான ஒரு வர்த்தகம் உள்ளது என்பதை நிரூபித்தது. அந்த புதிய கௌரவம் முன்னணி நடிகர்களின் படத்தில் அவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை நினைத்துப் பார்க்க இயலாது. ஆனால், மலையாளத்தில் மீனா, தேவயானி போன்றேnர் குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் மோகன்லால், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். நெகிழ்வான மலையாள சினிமாவிலும்கூட ஹவ் ஓல்ட் ஆர் யூ?, கரிக்குன்னம் சிக்ஸ், C/Oசாயிரா பானு, உதாரணம் சுஜாதா போன்ற நாயகி மையப் படங்களில் நடித்த மஞ்சு வாரியாரால் மட்டுமே அங்கு தொடர்ச்சியான வாய்ப்பை பெற முடிகிறது. 38 வயதிலும் முன்னணி நடிகையாக ஜெnலிக்க முடிகிறது. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரின் வெற்றியை இந்த பின்னணியில் ஆராய்வது முக்கியம்.

இவர்கள் மூவரும் பத்து வருடங்களை கடந்து முன்னணி நடிகைகளாக இருப்பதற்கு, தங்களின் அழகை தக்க வைத்துக் கொண்டது, தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்தது, திறமையை மேம்படுத்தியது என பல காரணங்கள் இருக்கலாம். எனினும், முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு அருகி வந்த நேரத்தில் நாயகி மையப் படங்களில் நடித்து, நடிகர்களின் துணையின்றி ஒரு வர்த்தகத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நிரூபித்ததே இன்று இவர்கள் தனித்துவத்துடன் தெரிவதற்கும், இன்னும் சில வருடங்கள் இவர்கள் சினிமாவில் நிலைபெற்றிருப்பார்கள் என்று நம்புவதற்கும் பிரதான காரணம்.

Tamil Cinema Trisha Jhon Baburaj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment