நயன்தாராவின் வாசுகியா... போராட்டத்தை சிதைக்க வரும் வாளா...?

வாசுகியை வெள்ளோட்டமாகவிட்டு அடுத்தக்கட்டமாக நேரடித் தமிழ்ப் படங்களை திரையிட்டு போராட்டத்தை நீர்த்துப்போக சிலர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாபு

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த புதிய நியமம் படத்தின் தமிழ் டப்பிங்கின் பெயர் வாசுகி. ஏ.கே.சாஜன் இயக்கிய படம். தமிழ் திரையுலகு நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை சிதைக்க வரும் வாளாக வாசுகியை சிலர் நினைக்கிறார்கள். ஏன் என்பதற்கு முன் வாசுகி படத்தைப் பற்றி பார்க்கலாம்.

2016 பிப்ரவரி 12 ஆம் தேதி புதிய நியமம் படம் வெளியானது. மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்தனர். இதுவொரு பழிவாங்கும் கதை.

ஆடம்பர அபார்ட்மெண்டில் வசிக்கும் தம்பதிகள் லூயிஸ் போத்தன், வாசுகி. போத்தன் ஒரு விமர்சகர். வாசுகி கதகளி கலைஞர். பள்ளியில் படிக்கும் ஒரே மகள். மகிழ்ச்சியாக செல்லும் குடும்பத்தில் திடீரென சில மாற்றங்கள். வாசுகி இயல்புக்கு மாறாக நடக்க ஆரம்பிக்கிறாள். மகளை பள்ளி வாகனத்தில் அனுப்பாமல் திடீரென்று கார் வாங்க வேண்டுமென்கிறாள், சொன்ன நாளிலேயே காரை வாங்க நிர்ப்பந்திக்கிறாள். மகள் அதன்பிறகு காரிலேயே பள்ளி செல்கிறாள். இதேபோல் வாசுகியின் செயல்பாடுகள் போத்தனை குழப்புகின்றன.

வாசுகி தனிமையில் மொட்டை மாடியில் துணி காயப்போட வருகிற நேரம் அங்கு வசிக்கும் இரண்டு வாலிபர்கள், துணி அயர்ன் செய்யும் வேலைக்காரனுடன் சேர்ந்து வாசுகியை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். வாசுகியின் மனநிலையை அந்த சம்பவம் சிதைத்துவிடுகிறது. தனக்கு நேர்ந்ததை கணவனிடம் சொல்ல பயம், தயக்கம். தனக்கு நேர்ந்தது சிறுமியான மகளுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. யாரைப் பார்த்தாலும் சந்தேகம், கோபம், பதட்டம்.

இந்த நேரத்தில் போலீஸ் உயரதிகாரி ஜீனா பாயின் அறிமுகம் வாசுகிக்கு கிடைக்கிறது. அவரை போனில் தொடர்பு கொள்ளும் வாசுகி தனக்கு நேர்ந்ததை சொல்கிறாள். தன்னை சிதைத்த மூன்று பேரையும் கொலை செய்ய வேண்டும் என்கிறாள். ஜீனா பாய் எப்படி அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டித் தருகிறார். போனில் அதனைக் கேட்டு ஒவ்வொருவராக வாசுகி கொலை செய்கிறாள். இதுதான் மொத்த படமும். போத்தனாக மம்முட்டி, வாசுகியாக நயன்தாரா. சேலையில் வட்ட பொட்டுடன் பாரம்பரிய அழகில் நயன்தாராவை பார்ப்பது சுகம்.

சரி, இந்தப் படத்தில் மம்முட்டிக்கு என்ன வேலை? புதிய நியமம் ஒரு நாயகி மையப்படம். மம்முட்டிக்கு படத்தில் அதிக வேலையில்லை. நயன்தாராவை நடிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறார். வேடிக்கைக்காக சொல்லவில்லை, படத்திலும்தான். எப்படி என்று சொன்னால் படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்.

இந்தப் படத்தை வாசுகி என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி வந்தது. இப்போது திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். நாளை மறுநாள் படம் திரைக்கு வருகிறது. இங்கேதான் பிரச்சனை.

தமிழ் திரையுலகம் முழு வேலைநிறுத்தத்தில் உள்ளது. மார்ச் 1 முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சென்னை திரையரங்குகள் ஆங்கில, இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களை வைத்து ஒப்பேற்றி வருகின்றன. இந்நிலையில் வாசுகி வெளியானால் அது போராட்டத்தை பாதிக்கும் என நினைக்கிறார்கள். வாசுகி வெளியீட்டிற்கு பின்னால் உள்ள சக்திகளின் எண்ணமும் அதுதான். மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் என்றாலும் நயன்தாரா தமிழகம் அறிந்த நடிகை. மாயா, டோரா என்று நாயகி மையப்படங்களாக நடிக்கிறார். அறம் படத்துக்குப் பிறகு அவருக்கென்று ஒரு வியாபாரச் சந்தை உருவாகியுள்ளது. ‘அறம் நயன்தாராவின் வாசுகி’ என்றே விளம்பரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட நேரடித் தமிழ்ப் படம் போலத்தான் வாசுகி பார்க்கப்படும், பார்க்கப்படுகிறது.

வாசுகியை வெள்ளோட்டமாகவிட்டு அடுத்தக்கட்டமாக நேரடித் தமிழ்ப் படங்களை திரையிட்டு போராட்டத்தை நீர்த்துப்போக சிலர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால்தான் வாசுகியா வாளா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருட்டு விசிடி தயார் செய்த திரையரங்கின் புரெஜக்டரை போலீஸ் கைப்பற்றினால் க்யூப் நிறுவனம் அந்த திரையரங்குக்கு உடனே புதிய புரெஜக்டரை தருகிறது. தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையென திரையரங்குகளை திறந்து வைத்திருக்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். சம்பளத்தில் கைவைப்பார்களோ என்ற அச்சத்தில் வாய்மூடி இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் சீர்த்திருத்தம் முக்கியம் என்று தயாரிப்பாளர்களும், பெப்சி தொழிலாளர்களும் அமைதியாக வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள். அவர்களது ஒற்றுமை மீது தொடுக்கப்படும் அம்பு வாசுகி. அது தேன்கூட்டில் விட்டெறிந்த கல்லாகிவிடக் கூடாது.

×Close
×Close