சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல டீ நிறுவனம் சாய் வாலே. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தனது கிளைகளை அதிகரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5 கோடி முதலீட்டை பெறுகிறது.
சுனில் சேத்தியா, சுனில் குமார் சிங்க்வி, மனிஷ் மார்டியா மற்றும் யுனி-எம் நெட்வொர்க், மும்பையை சேர்ந்த ஏஞ்சல் நெட்வொர்க் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சேர்ந்துள்ளனர்.
கூடுதலாக பெங்களூருவைச் சேர்ந்த அன்லிஸ்டட கார்ட் எல்.எல்.பி என்னும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் இதில் முதலீட்டாளராக இணைந்துள்ளது மற்றும் சென்னையை சேர்ந்த கன்சைய்ன்ஸ் மல்டி ஃபேமிலி ஆபிஸ் நிறுவனம் இதில் பெரும் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சாய் வாலே நிறுவனர் விதுர் மகேஷ்வரி கூறுகையில் "தற்போது கிடைத்துள்ள முதலீட்டில் 80 சதவிகிதம் எங்களுடைய கடைகளின் கிளைகள் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டுக்குள் 35 கடைகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள தொகை நிர்வாக அணி, சந்தைப்படுத்துதல் மற்றும் பேக் எண்ட் விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்" என்றார்.
மேலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் மால்களிலும் தங்களது கிளைகளைத் திறக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிஜிட்டல் மற்றும் இ-காமர்ஸ் வர்த்தகத்தை அதிகரித்தோம். வலுவான முதலீட்டாளர்கள் கிடைத்திருக்கும் சூழலில் எதிர்வரும் காலங்களில் எங்களது வளர்ச்சி இலக்கு குறித்துத் தெளிவாக உள்ளோம் என மகேஸ்வரி கூறியுள்ளார்.
2018 இல் தொடங்கப்பட்ட சாய் வாலே, தற்போது அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், ஆழ்வார்பேட்டை மற்றும் அடையார் உள்ளிட்ட இடங்களில் 20 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil