நடிகை நயன்தாரா ஏற்கனவே மலையாளத்தில் நிவின் பாலிவுடன் லவ் ஆக்ஷன் ட்ராமா என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது அவருடன் 2-வது படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் பூஜைக்கான போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா, தமிழ் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திப்பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது டியூட் விக்கி இயக்கத்தில் 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தில் நடித்து வருகிறார், மேலும் இயக்குனர் சஷிகாந்தின் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது புதிதாக ஒரு மலையாள படத்தை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். நிவின்பாலி நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு டியர் ஸ்டூடண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 5-ம் தேதி கொச்சியில் முஹுரத் பூஜையுடன் தொடங்கியது. பூஜையின்போது எடுக்கப்பட்ட கிளாப்போர்டு படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நயன்தாரா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கும் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நயன்தாரா டீச்சராக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
முஜீப் மஜீத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் நிவின் மற்றும் நயன் ஜோடியாக நடித்துள்ளனர் மேலும் நயன்தாரா கடைசியாக மலையாளத்தில் பிருத்விராஜின் 'கோல்ட்' படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“