நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், டிசம்பரில் நடைபெறலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குனரான விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இருவரும் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று செல்பி உள்ளிட்ட போட்டோக்களை ஊடகங்களில் போட்டு, நயன்தாரா ரசிகர்களின் வயிற்றில் நெருப்பை கொட்டி வருகின்றனர்.
நயன்தாராவை பொறுத்த வரை தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். திருமணம் அதற்கு தடையாக அமையக்கூடாது என அவர் நினைத்து வந்தார். எனவே திருமணத்தை அவர் தள்ளிப்போட்டு கொண்டே இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் வீட்டில் திருமணம் குறித்து நச்சரித்துக்கொண்டே இருந்தனர். இதனால் அவர் நயன்தாராவிடம் எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் நயன்தாராவோ அதற்கு பிடிக்கொடுக்காமல் நழுவி வந்தார். அதோடு நூறு படங்களில் நடித்த பிறகுதான் திருமணம் என புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வந்தது. அந்தக் கொண்டாட்டத்தின் போது, பிறந்த நாள் பரிசாக நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொடுத்தது திருமணத்திற்கான சம்மதத்தை தான் எனக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என விக்னேஷ் சிவனிடம் நயன்தாரா கூறியிருக்கிறாராம். இதைக் கேட்டு விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டாராம்.
இந்த திருமணம் மிக எளிமையான முறையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடக்கும் என தெரிகிறது. மேலும், திருமணம் நடைபெறும் இடம் குறித்தும் இதுவரை அவர்கள் முடிவு செய்யவில்லையாம். ஒருவேளை வெளிநாட்டில் இந்த திருமணம் நடக்கும் என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் பிகில் படம் தீபாவளி பண்டிகைக்கும், தர்பார் படம், பொங்கல் கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவனின் அறிமுக தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்திலும் நயன்தாரா முதன்மை கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.