பாபு:
கோலமாவு கோகிலா படம் நயன்தாராவை புதிய உயரங்களுக்கு உயர்த்தியிருக்கிறது. ஓபனிங் கிங் ரஜினியா, விஜய்யா இல்லை அஜித்தா என்ற கேள்வி இருக்கலாம். ஆனால், ஓபனிங் குயின் நயன்தாரா என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
கடந்த நாற்பது வருடங்களில் ஒரு படத்தை தனியாக தூக்கி சுமக்கும் ஸ்டார் பவருடன் இருந்த நடிகைகள் கொஞ்சமே கொஞ்சம். விஜயசாந்தி அப்படி இருந்தார். அவரது பூ ஒன்று புயலானது, வைஜெயந்தி ஐபிஎஸ் போன்ற படங்கள் தெலுங்கு, தமிழ் இருமொழிகளிலும் அசுர ஓட்டம் ஓடின. அதன் பிறகு குஷ்பு, சிம்ரன் என்று அழகும் திறமையும் கொண்ட நடிகைகள் பலர் தமிழ் திரையுலகில் உதித்தாலும், தனிநபராக ஒரு படத்தை கரைசேர்க்கும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. அனுஷ்காவின் அருந்ததி வரும்வரை இதுவே நிலைமை. அனுஷ்காவின் ருத்ரமாதேவி, பாக்மதி போன்ற சில படங்கள் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஓடின.
ஓபனிங் குயின் நயன்தாரா:
ஆனால், விஜயசாந்தி, அனுஷ்கா நடித்த நாயகி மையப்படங்கள் அனைத்தும் தெலுங்கில் தயாரானவை. அங்கு வெளியாகி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டவை. அந்தவகையில் கடந்த அரைநூற்றாண்டில் தமிழில் ஒரு படத்தை தனியாக ஓடவைக்கும் திறனுடன் எந்த நடிகையும் இருந்ததில்லை என்பதே உண்மை. அல்லது தமிழ் சினிமா நடிகைகளுக்கு அப்படியான வாய்ப்பை அனுமதித்ததில்லை. நயன்தாரா அந்த சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார்.
கோலமாவு கோகிலா
நீ எங்கே என் அன்பே படத்தில் தோல்வியுடன் தொடங்கிய அவரது பயணம் மாயாவில் வெற்றியாகி, டோராவில் மீண்டும் தோல்வியாகி அறத்தில் ஒரு அந்தஸ்தை பெற்றது. சென்ற வாரம் வெளியான கோலமாவு கோகிலா அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறது. கோலமாவு கோகிலா தமிழகத்தில் வெளியான முதல்நாளில் 3.5 கோடிகளையும், இரண்டாவது நாளில் 4 கோடிகளையும் வசூலித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஞாயிறும் 4 கோடிகளுக்கு குறைவில்லாத வசூல். மொத்தமாக மூன்று நாளில் 10 கோடிகளை கடந்திருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களே பத்து கோடி என்ற எல்லையை தாண்டும்.
சென்னை பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை முதல் மூன்று தினங்களில் படம் 1.60 கோடியை வசூலித்துள்ளது. சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களின் படங்களின் ஓபனிங் வசூலுக்கு இணையானது இந்த வசூல். இந்த வருடம் வெளியான கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 273 காட்சிகளில் சுமார் 1.48 கோடிகளை வசூலித்தது. ஜுங்கா 270 காட்சிகளில் 1.63 கோடி. நயன்தாராவின் கோலமாவு கோகிலா 264 காட்சிகளில் 1.60 கோடி. மிகச்சிறந்த ஓபனிங்.