விஜய் டிவியில் இந்த வார‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அம்மா பெண்கள் vs அவர்களின் கணவன் மார்கள் பங்கேற்ற பெண்கள் ஒரே மாதிரியாக தங்கள் அம்மா வீட்டில் எதிர்பார்ப்பது சரி என்றும் கணவரின் வீட்டில் சொல்வது சரி இல்லை என்று கூறியதைக் கேட்டு கடுப்பான கோபிநாத், முடியல நான் ரிட்டயராகிறேன் என்று கூறியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பான விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஒரு டாக் ஷோ நிகழ்ச்சி மக்களை சென்றடைய திணறிக்கொண்டிருந்த சூழலில், விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி அரட்டை அரங்கத்தை தாண்டி உரையாடல், விவாதம் என்ற அடுத்த கட்ட பரிணாமத்துடன் ஒரு அறிவுப்பூர்வமான விவாத பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு காரணம், நீயா நானா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்யும் தொகுப்பாளர் கோபிநாத் மிக முக்கியக் காரணம். அவருடைய கனீர் என்ற உறுதியான பேச்சு, அவருடைய பாவனை எல்லாமே அந்த நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தியது.
நீயா நானா நிகழ்ச்சி ஆரம்பத்தில் பெரும் வரவேற்பையும் வெற்றியும் பெறுவதற்கு அதன் இயக்குனர் ஆண்டனியும் அவருடைய குழுவினரும் கோபிநாத்தும் முக்கிய தூண்களாக இருந்தனர்.
இன்றைக்கு தமிழில் ஒரு பிரபலமான டாக்ஷோ என்றால் அது நீயா நானா நிகழ்ச்சிதான். நீயா நானா நிகழ்ச்சி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோட் சூட் அணிந்து தொகுத்து வழங்கும் கோபிநாத் மட்டுமே. நீயா நானா நிகழ்ச்சியைப் போல, ஜீ தமிழ் டிவியில் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும், தமிழா தமிழா நிகழ்ச்சியும் கவனத்தைப் பெற்றாலும், கோபிநாத் இன்னும் முதல் வரிசையிலேயே இருக்கிறார்.
கோபிநாத் நீயா நானா நிகழ்ச்சியில் இரு தரப்புக்கும் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கி, அவர்கள் வழியாகவே விவாதத்தையும் கருத்துக்களையும் வெளிக்கொண்டு வருவார். தேவையான இடத்தில் மட்டுமே நெறியாளராக கருத்துக்களைக் கூறுவார்.
இந்த வாரம் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சி தலைப்பில், திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்களும், இன்னொரு பக்கம் அந்த பெண்களின் கணவர்களும் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்களும், இன்னொரு பக்கம் அந்த பெண்களின் கணவர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது பல்வேறு விஷயங்களையும் கோபிநாத் இரு தரப்பினரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
அதில், அம்மா பேச்சை கேட்டு செயல்படும் பெண்களிடம் தனது தாயுடன் இணைந்து மனைவி தன்னிடம் அணியும் உடைகளில் சிலவற்றையும் எதிர்பார்ப்பதாக கணவர்கள் சிலர் கூறுகிறார்கள்.
இது குறித்து கணவர்கள் தரப்பில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “நான் ஒரு ஷர்ட் போட்டு இருக்கேன், அப்புறம் ரெண்டு பேரும் பேசுவாங்க, வருவாங்க. இது வேணாம் இது போட்டுக்கோன்னு சொல்லுவாங்க” என தனது மனைவி மற்றும் மாமியார் இணைந்து முடிவு எடுப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் அந்த நபரின் மனைவி, “இப்ப நம்ம வீட்ல இருக்கேன்னா எல்லாரோட ஒப்பீனியனும் முக்கியமில்ல சார்” என கூறியதுமே அந்த பெண்ணிடம் கேள்வி கேட்கும் கோபிநாத், “நீங்க பிடிச்ச மாதிரி ஒரு டிரஸ் பண்ணி ஒரு கல்யாணத்துக்காக ரெடியா இருக்கீங்க. உங்க கணவர் ஒண்ணுமே சொல்லல, ஆனா உங்க மாமியார் அப்படியே கிராஸ் பண்றபோது உங்க புடவையை பார்த்துட்டாங்க. முகூர்த்தத்துக்கு எடுத்த பச்சை கலர் புடவையை கட்ட சொல்லுன்னு சொல்லிட்டாங்க. நீங்க அந்த மாதிரி மாத்தி கட்டிப்பீங்களா?” என்று கேட்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் அந்தப் பெண், “இல்ல சார், நம்ம அதுக்காக எல்லாம் பிளான் பண்ணி முன்னாடியே ரெடி பண்ணி தைச்சு வச்சிருக்கோம். திடீர்ன்னு அவங்க சொல்றாங்களேன்னு எப்படி சார் மாற்ற முடியும்?” என்று கூறி மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறுகிறார்.
இதைக் கேட்டதும் கோபிநாத், “அது எப்படிங்க கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம பேசுறீங்க. அப்புறம் அவங்க மட்டும் ஏன் அதை செய்யணும்” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண், “அவங்க ஒரு உரிமைல சொல்றாங்க” என கூறுகிறார்.
இதற்கு கோபிநாத், “உங்க மாமியாரும் அதே மாதிரி தானே சொல்றாங்க. அது தப்புன்னா அப்ப இது மட்டும் எப்படி சரி?” என்று கேட்கிறார். ஆனால், அந்த பெண் அதெல்லாம் இல்லை என்று கூறுகிறார். இந்த பதிலைக்கேட்டு கோபிநாத், நான் விலகிக்கிறேன் டா. என்னால முடியாதுடா” என்கிறார்.
இதே போல மற்ற சில பெண்களும் தாங்கள் எதிர்பார்ப்பது சரியானது என்றும் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது சரியில்லை என்றும் குறிப்பிட கடைசியில் பேசும் கோபிநாத், “நான் ரிட்டயர் ஆகிறேன். என்னால முடியல” என கூறிக்கொண்டு அப்படியே சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்புவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.