/indian-express-tamil/media/media_files/2025/09/03/neeya-naana-2025-09-03-13-10-16.jpg)
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான விவாத நிகழ்ச்சி, 'நீயா நானா', ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தெரு நாய்கள் குறித்து நடந்த இந்த விவாதத்தில், எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் தாக்கம், அவசரமான கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், சாலை விபத்தில் தனது ஆறு வயது மகனை இழந்த தந்தை ஒருவர் தனது துயரத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். குறுக்கே வந்த ஒரு நாய்க்கு வழிவிடுவதற்காக ஆட்டோவை திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில் தன் கண்முன்னேயே மகன் இறந்த சோகத்தை அவர் விவரித்தது, பார்வையாளர்கள் அனைவரையும் கலங்கடித்தது.
இந்தக் கொடூரமான தருணத்தில், நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய அணியில் இருந்த சுசி வெங்கட் என்ற பெண், தானும் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கூறி, அதை ஒரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதுவே சர்ச்சையின் மையமாக மாறியது. சுசி வெங்கட்டின் இந்த பேச்சு, அந்தத் தந்தையின் வலியை குறைத்து மதிப்பிட்டது போல் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதன் விளைவாக, சுசி வெங்கட் கடுமையான விமர்சனத்திற்கும், கேலிக்கும் ஆளானார். பலரும் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மனிதாபிமானம் இல்லாதவர் என்றும் கடுமையாக விமர்சித்தனர்.
தன்னைச் சுற்றி எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், சுசி வெங்கட் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் விளக்கமளித்தார். அதில், தான் பேசியதன் முழுமையான நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறினார். விபத்தில் மகனை இழந்த அந்தத் தந்தையின் வலியைத் தானும் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அவர் தனது விளக்கத்தில், தானும் பைக் விபத்தில் சிக்கியதாகவும், அப்போது தன் மகளுடன், விபத்துக்குக் காரணமாக இருந்த ஒரு குழந்தைக்கும் ஏற்பட்ட காயம் குறித்து பேச வந்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போது, "யார் என்று தெரியாத அந்தக் குழந்தையை காப்பாற்றுவதா அல்லது என் சொந்த குழந்தையைப் பாதுகாப்பதா?" என்ற தனது பரிதவிப்பைத்தான் அவர் வெளிப்படுத்த வந்ததாகத் தெரிவித்தார். ஆனால், அவர் முழுமையாகப் பேசி முடிப்பதற்கு முன்பே, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அவரை நிறுத்திவிட்டார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது ஒரு பெரிய சர்ச்சையாக உருவெடுக்கும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் என்று கோபிநாத் அவரிடம் கூறியதாகவும் சுசி வெங்கட் தெரிவித்தார். ஆனால், சுசி பேசிய அந்தப் பகுதியையே நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காக (ப்ரோமோ) பயன்படுத்தியுள்ளனர். இதனால், அவரது முழுமையான கருத்து மக்களுக்குத் தெரியாமல் போனது.
நிகழ்ச்சியின் மற்றொரு விளம்பரத்தில், நாய்கள் போல ஊளையிடும் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது குறித்து விளக்கமளித்த சுசி வெங்கட், அது நாய்களைப் போல சத்தம் போடும் போட்டி அல்ல என்று கூறினார். நிகழ்ச்சியின்போது, கோபிநாத் தான், நாய்களின் குரலைப் பிரதிபலித்து ஊளையிடும்படி சொன்னதாகவும், அதனை உணர்த்துவதற்காகவே நாங்கள் அப்படிச் செய்தோம் என்றும் தெரிவித்தார். ஆனால், இந்தச் சமயத்தில், எதிர் அணியினர் சிரிப்பைக் கட்டுப்படுத்தாமல் இருந்ததையும், அதை கோபிநாத் கண்டிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த நிகழ்ச்சியில், குழந்தையை இழந்த அந்தத் தந்தை என்னைப் பார்த்து 'நீங்கள் ஏதோ சொல்ல வந்தீர்கள், ஆனால் உங்களை பேச விடாமல் தடுத்துவிட்டார்கள். உங்களிடம் ஏதோ ஒரு வலி இருந்தது' என்று கேட்டார். அவர் என்னைப் புரிந்து கொண்டார், அது போதும். வேறு யாரும் என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்குக் கவலை இல்லை" என்று அவர் உருக்கத்துடன் பேசியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.