Neha Menon Tamil News: தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை நேஹா மேனன். 19 வயதான இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்வீகமாக கொண்டவர். படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தமிழில் பைரவி சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி போன்ற சீரியல்களிலும் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி சீரியல் தான்.

கடந்த 2013ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற சீரியல் வாணி ராணி. இதில் நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். அவருடைய மகளாக தேனு என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நேஹா. இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவர் சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் வெளியான ’ஜாக்சன் துரை’, ஆர்யா நடிப்பில் வந்த ‘யட்சன்’ ஆகியப் படங்களிலும் நடித்திருந்தார். மேலும், “தி எல்லோ பெஸ்டிவல்” என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

கொரோனா லாக்டவுனால் நடிப்பிலிருந்து சில நாட்கள் விலகி இருந்தவர் தற்போது இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியின் ஹிட் சீரியலான சித்தி 2வில் ராதிகாவின் மகளாகவும், விஜய்டிவியின் டாப் சீரியலான பாக்கியலட்சுமியிலும் பாக்யாவின் மகள் இனியாவாகவும் நடித்து வருகிறார்.

இரண்டு சீரியல்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நேஹாவுக்கு ரசிகர்கள் அதிகம். மேலும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் அவ்வப்போது எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அதில் பதிவிட்டும் வருகிறார்.
சமீபத்தில் தனது அம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நேஹா. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், சிலரோ இந்த வயதில் குழந்தை பெத்துக்கு வேணுமா என்று அவரது அம்மாவை விமர்சித்தனர். அதற்கு தக்க பதிலடி கொடுத்து இருந்தார் நேஹா.

இந்நிலையில், நேஹா சில நாட்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அப்போது ஒருவர், ‘உங்களின் எடை எவ்வளவு’ என்று கேட்க, இதற்கு கடுப்பான நேஹா “ஏன் எப்போதும் ஒருவரின் எடை பற்றிய கவலை கொள்கிறீர்கள்” என்று கூறி கடிந்திருக்கிறார்.
மேலும், “இதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். அது என்ன ஒரு அறிவா ? கிடையாது. இல்லை நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் விஷயமா ? அப்படி என்றால் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்ளவே வேண்டாம். இது போன்ற கேள்விகள் எழுப்படுவது முதல் முறை கிடையாது.”என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“