ஜெய் பீம் திரைப்படத்திற்கு முதலில் பாராட்டு தெரிவித்த லக்ஷ்மி ராமகிருஷணன், தற்போது படத் தயாரிப்பாளர்களின் தவறான விளக்கத்தை ஏற்க முடியாது என விமர்சித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் பெரிய வரவேற்பு அளித்த நிலையில், படம் சர்ச்சைகளில் சிக்கியது. இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக வன்னிய அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் காலண்டர் ஒன்றில் இடம்பெற்ற அக்னி கலச புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. உடனடியாக அந்த காலண்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படம் வன்னிய சமூகத்தினரை புண்படுத்திவிட்டதாக வன்னிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்த படம் குறித்து விமர்சித்து இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் கதையில் நேர்மையாக இருந்திருந்தால் ஜெய் பீம் ஒரு சிறந்த ஊக்கமூட்டும் படமாக இருந்திருக்கும். காவல்துறையின் அட்டூழியத்திற்கு எதிராக சாதி, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றுபட்டு நின்றது நிஜ வாழ்க்கை சம்பவம்! பிரதிநிதித்துவம் அவசியம் ஆனால் தவறாக சித்தரிப்பது அழிவு?! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும், உண்மையாக கடலூரில் ராஜாக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக ஜாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம். ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். அதில் ஒருவர், ஆனால் நீங்கள் அன்று ஜெய்பீம் பார்க்கும் போது சொன்னீர்கள் படத்தில் ஜாதி அல்லது மதம் தொடர்பான எதையும் நீங்கள் உணரவில்லை.! என்று, ஆனால் இப்போது நீங்கள் திரைப்படத்தைப் பற்றிய உங்கள் கருத்தை மாற்றிவிட்டீர்கள். ஏன் இரு வேறு மனநிலை!! என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், திரைப்படம் மனதைத் தொட்டது & உண்மைச் சம்பவம் என்று நம்பினேன். பின்னர் சர்ச்சைகள் எழுந்தபின் நான் ஆய்வு செய்து பார்த்த போது தான் தெரிந்தது. உண்மை சம்பவம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் நின்றது தான் என்று ! தயாரிப்பாளர்கள் தங்கள் கதைக்கு ஏற்றவாறு கையாண்டுள்ளனர்! தவறான விளக்கத்தை ஏற்க முடியாது. என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil