scorecardresearch

நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

மொத்தத்தில், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, யுவன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்திருக்கிறது இந்த நெஞ்சம் மறப்பதில்லை.

நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்; நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

எல்லாக் கலையும் சமூகத்தை அதன் போக்கை அதனதன் அளவில் பிரதிபலிக்கவே செய்யும். சமீப ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், துப்பறியும் த்ரில்லர் படங்களும், பேய் படங்களும் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன. இது ஒரு வகையில் வேகமாக மாறி வரும் உலகம், பொருளாதார நெருக்கடிகள், அதனால், சமூகத்தில் ஏற்படும் உளவியல் நெருக்கடிகள், குற்றங்கள் ஆகியவற்றின் பிரதிபலிப்புகள் என்று சினிமா ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில், தமிழ் சினிமா துறையில், தொடர்ச்சியாக பேய்க் கதைகளும், துப்பறியும் த்ரில்லர் கதைகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த வகையான படங்களில் இயக்குனர்கள் தங்களின் படைப்பு திறனுக்கு ஏற்ப வித்தியாசங்களைக் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்று கொண்டாடப்படும் செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வித்தியாசமாக வந்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரை வைத்து எல்லோரும் இதை ஒரு காதல் படம் என்று எதிர்பார்த்த நிலையில், டீசர் வெளியாகி இது ஒரு பேய் படம் என்று உறுதியானது. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பல தடைகளைத் தாண்டி திரையரங்கில் ரிலீசாகி தமிழ் சினிமாவுக்கு ஒரு புது ஹாரர் படமாக வந்துள்ளது. செல்வராகவனின் படைப்புக்கு நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார்.

கெட்டவன் நல்லவனை கொலை செய்ய, அந்த நல்லவன் ஆவியாக வந்து பழி வாங்குவது என்பதுதான் பேய்க் கதைகளின் ஃபார்முலாவாக இருக்கிறது. இதே ஃபார்முலாவை செல்வராகவன் தனது மிரளவைக்கு திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை இதுதான், ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவள் மரியம் (ரெஜினா கசான்ட்ரா). இவர் கடவுள் பக்தி அதிகம் உள்ளவராக இருக்கிறார். இவர் ராம்சே (எஸ்.ஜே.சூர்யா) – ஸ்வேதா (நந்திதா ஸ்வேதா) என்ற பணக்கார தம்பதியரின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார்.

குறுக்கு வழியில் பணக்காரராக ஆன ராம்சே தனது குழந்தையை பார்த்துக்கொள்ள வரும் மரியம்மை அடைய வேண்டும் என நினைக்கிறார். ராம்சே மரியமிடம் சில்மிஷம் செய்ய முயற்சிக்கும்போது மரியம் விலகிச் செல்கிறார். இந்த போக்கின் உச்சகட்டத்தில் ராம்சே மரியம்மை கொலை செய்கிறார். தன்னை கொலை செய்த ராம்சேவை பழிவாங்க மரியம் ஆவியாக வருகிறார். மரியம் ஆவியாக வந்து ராம்சேவை பழி வாங்குகிறாரா? இல்லையா? என்பதுதான் கதை.

ராம்சே கதா பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். படம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது இசையால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, யுவன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்திருக்கிறது இந்த நெஞ்சம் மறப்பதில்லை.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இயக்குனர் செல்வராகவனின் பிறந்த நாளில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பாஸிட்டிவ்வாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில நெட்டிசன்கள் சிலர், படத்தில் எஸ்.ஜே.சூர்யா கூறும் டயலாக்கான “பார்த்த உடனே வர்றதுதான் காதல்… பார்க்க பார்க்க வர்றதுக்கு பேரு காஜி” என்பதை பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஒரு சமூக ஊடகப் பயனர் “நெஞ்சம் மறப்பதில்லை படம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே யுவன்ஷங்கர் ராஜா சிம்மாசனத்துல ஏறி உக்கார்ந்துட்டியே” என்று யுவனின் இசையை புகழ்ந்து உள்ளார்.

மற்றொரு சமூக ஊடகப் பயனர், “ஆடியன்ஸ்: படம் புடிக்கல.. இப்ப என்ன பண்ரது?”
“5 வருஷம் Wait பண்ணி அப்புறம் பாருங்க.. அப்ப நல்லாருக்கும்… ” என்று கூறி மீம் போட்டிருக்கிறார்.

இப்படி செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு நெட்டிசன்கள் கலவையான ரியாக்‌ஷனை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nenjam marappathillai movie reiview netizen reactions to director selvaragavan movie