Nenjamundu Nermaiyundu Oodu Raja: பொது இடங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, சண்டை போன்ற பிரச்னைகளை செல்ஃபோனில் படமெடுக்காமல் தட்டிக் கேட்க யாராவது வருவார்கள் என்பதை மையமாக வைத்து ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
தற்காலத்தில் டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு அதிகம். அப்படி யூ-ட்யூபில் பிரபலமானவர்கள் இதில் நடிக்க, யூ-ட்யூப் நிகழ்ச்சிகளை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கிறார்.
வி.ஜே, சீரியல் நடிகர் என பயணித்த ரியோ ராஜ் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். அவரின் நண்பராக விக்னேஷ் காந்த். ஹீரோயினாக ஷெரின் காஞ்ச்வாலா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், மயில்சாமி, சுட்டி அரவிந்த் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
யூ-ட்யூபில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ரியோவும், விக்னேஷ்காந்தும். ஒரு பிராங்க் நிகழ்ச்சியில் ராதாரவியுடன் பழக்கமாகிறார்கள். அவர்களை நேரில் வர சொல்லி பேசும் ராதாரவி, தான் கொடுக்கும் 3 டாஸ்க்குகளை பிசிறு தட்டாமல் செய்தால், பெரிய தொகை தருவதாக உறுதியளிக்கிறார்.
முதலில் பிரேக்கிங் நியூஸில் இருவரும் வர வேண்டும், அடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை எம்.எல்.ஏ ஆக்க வேண்டு. இது இரண்டையும் இவர்கள் செய்து விடுகிறார்கள்.
மூன்றாவதாக கொடுத்த டாஸ்க், நடக்கப்போகும் கொலையை தடுக்க வேண்டும், அதை இருவரும் தடுத்தார்களா என்பது தான் கதை.
சபீரின் இசை ரசிக்க வைக்கவில்லை. ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் குறிப்பிடும்படியாக இல்லை.
’கனா’ படத்தைத் தொடர்ந்து ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தைத் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.
புதியவர்கள் வரட்டும், என்ற நல்லெண்ணத்தில் அவர் தயாரித்திருக்கக் கூடும். ஆனால் சிவாவின் நம்பிக்கையை நாம் காப்பாற்றினோமா? என்பதை படக்குழுவினர் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
படத்தின் கிளைமேக்ஸுக்காக இப்படி ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதெல்லாம் டூ மச். நாயகி இல்லாமல் கூட இந்த படத்தை எடுத்திருக்கலாம். ரியோவுக்கு முதல் படம் என்பதை யாராவது ஞாபகப் படுத்தியிருக்கலாம், விக்னேஷுக்கு எது காமெடி என்பதை முதலில் புரிய வைக்க வேண்டும்.
சினிமா மீது தீரா காதல் இருப்பின் இன்னும் கடினமாக உழைத்து, அடுத்தமுறை இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டால் உங்களுக்கு நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் உண்டு!