Ner Konda Paarvai 2nd Single: இயக்குநர் சிவாவின் ’விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘நேர் கொண்ட பார்வை’.
பாலிவுட்டில் 2016-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இது. இந்தியில் நடிகர் அமிதாப் பச்சனும், நடிகை டாப்ஸியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழில் இதனை ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.
இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளருமான போனி கபூர், ஸி ஸ்டூடியோவுடன் இணைந்துத் தயாரித்திருக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வானின் இருள்’ என்ற முதல் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘EDM' என்ற பாடல் இன்று மாலை 6.45-க்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறார் போனி கபூர். அதோடு உங்களது ஹெட்ஃபோனை தயாராக வைத்திருங்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் இந்தப் பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு கல்கி அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.