Nerkonda Paarvai Tamil Movie Review: சிவா பரிமாண படங்களில் இருந்து வெளிவந்திருக்கும் அஜித், ஆண்கள், பெண்கள் இழையோடும் இந்த சமூகத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் குரூர பரிணாம வளர்ச்சியை மையப்படுத்திய கதைக்கருவில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை.
முதலில், ரீமேக்காக இருந்தாலும் இது போன்ற கதைக் களத்தை தேர்வு செய்த அஜித்துக்கு வாழ்த்துகள். மாஸ்டர் பீஸ் கதையில் எந்தவித டேமேஜும் இல்லாமல், தமிழுக்கு ரீமேக் செய்ய ஒப்புக் கொண்ட இயக்குனர் ஹெச்.வினோத்துக்கும் வாழ்த்துகள்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில் மூன்று பெண்களும் இருக்க, நினைத்தபடி அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.
அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன் முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அஜித், தனது திறமையான வாதத்தால் எப்படி வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிங்க் படத்தில் அமிதாப் கதாப்பாத்திரம் தான் இதில் அஜித்துக்கு. பிங்க் பார்க்கும் போது, வயதான அமிதாப் பேசும் காட்சிகளில் நாமும் அந்த வயதான மெல்லிய நடுக்கத்தை உணர முடிந்தது. இதில், அஜித் பேசும் காட்சிகளில் நாம் கம்பீரத்தை உணர முடிகிறது. அவ்வளவு தான் பிங்க் படத்துக்கும், நேர்கொண்ட பார்வை படத்துக்கும் உள்ள வேறுபாடு.
எப்போதோ தமிழ் சினிமாவில் கால் பதித்திருக்க வேண்டிய வித்யாபாலன், நேர்கொண்ட பார்வையில் தனது முகத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார், அஜித் - வித்யாபாலன் காட்சிகள் ரசனை.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சந்தேகமே இல்லாமல் இது திருப்புமுனை படம் என்று சொல்லலாம். நன்றாக நடிக்க தெரிந்த நடிகையாக இருக்கிறார். கனமான காட்சிகளை அவர் சுமந்து நின்ற பாரம் தெரியவில்லை.
அஜித்... 'சிட்டிசன்' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஒரு நீதிமன்றத்தில் நடப்பது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அஜித்குமார் குற்றவாளியாக நின்று தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பார். உணர்ச்சிமிகு அந்த காட்சியில் அஜித் பேசிய தமிழ் உச்சரிப்பு அப்போது கிண்டலுக்கு உள்ளானது. தியேட்டரில், பல பேர் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் அஜித் பேசிய தமிழ் ஸ்லாங் கேட்டு சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
எந்த கோர்ட் சீனில் அன்று அஜித் கிண்டல் செய்யப்பட்டாரோ, இன்று அதே கோர்ட் சீனில், காட்சிக்கு காட்சி விசில் சத்தத்தையும், கைத் தட்டல்களையும் பெற்று அதிர வைத்திருக்கிறார் அஜித். அவரது வசன உச்சரிப்பாகட்டும், தீர்க்கமான பார்வையாகட்டும், அதில் கோபம் கொப்பளிப்பதாக இருக்கட்டும், அசரடித்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ஒகே ரகம். ஆனால், பின்னணி இசையில் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெடல் சிறப்பு.
மொத்தத்தில், நேர்கொண்ட பார்வையில் 'வச்ச குறி தப்பவில்லை'!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.