கமல்ஹாசனின் 'தக் லைஃப்', அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' போன்ற பல்வேறு திரைப்படங்கள் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இதைத் தொடர்ந்து, இப்படங்களுக்கான ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. அதன்படி, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் விவரங்களை இதில் காணலாம்.
குட் பேட் அக்லி:
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா ஆகியோர் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக, 'குட் பேட் அக்லி' உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
ரெட்ரோ:
சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் 'ரெட்ரோ' திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். கேங்ஸ்டர் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர். மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், அதன் தொடர்ச்சியாக நெட்ஃப்ளிக்ஸில் களமிறங்குகிறது.
பைசன்:
துருவ் விக்ரமைக் கொண்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் திரைப்படம், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படமும் நெட்ஃப்ளிக்ஸில் தெலுங்கு, இந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தக் லைஃப்:
'நாயகன்' திரைப்படத்திற்கு பின்பு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்திருப்பதால் 'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்பு, திரிஷா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பின்பு, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி:
அஜித்குமார், திரிஷா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.
இவை தவிர, 'டிராகன்', 'காந்தா' போன்ற திரைப்படங்களும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.