மணிரத்தினம், ஜெயேந்திர பஞ்சாபகேசன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் 9 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய 9 குறும்படங்களின் தொகுப்பான ‘நவரசா’ எப்போது ஸ்ட்ரீமிங் தொடங்கும் என்பதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ் கதாநாயகனாக நடித்து ஜூன் 18ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ள ஜெகமே தந்திரம் திரைப்படத்துகு பிறகு, ‘நவரசா’ தமிழ்த் தொகுப்பு 2021ம் ஆண்டில் நெட்ஃபிக்ஸில் இரண்டாவது பெரிய தமிழ் திரைப்படமாக வெளியாகிறது.
தமிழ் குறும்பங்களின் தொகுப்பான நவராசா ஆகஸ்ட் 6ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமாத் துறை தொழிலாளர்களுக்கு நிதி அளித்து உதவும் வகையில் ‘நவரசா’ புராஜக்ட் தொடங்கப்பட்டுள்ளது. இதை இயக்குநர்கள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆகியோர் உருவாக்கினர். இந்த மூத்த இயக்குனர்கள் இந்த புராஜக்ட்டை இலவசமாக செய்ய ஒப்புக்கொண்ட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை ஒன்றிணைத்துள்ளனர். படத்தின் வருவாய் கோவிட் -19 ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படும்.
ஒன்பது ‘ரசங்கள்’ (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு ஒன்பது குறும்படங்களை மிக முக்கியமான 9 இயக்குனர்கள் 9 குறும்படங்களை உருவாக்கியுள்ளனர். பிஜய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பாராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இந்த குறும்படங்களை இயக்கவுள்ளனர். இதில் குறிப்பிடும்படியான முக்கிய விஷயம், நடிகர் அரவிந்த்சாமி இந்த தொகுப்பில், ஒரு குறும்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
நடிகர்கள் சூரியா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், சரவணன், அழகம் பெருமாள், ரேவதி, நித்யா மேனன், பார்வதி ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட 40 முன்னணி நடிகர்கள் நடிகைகள் இந்த தொகுப்பில் நடிக்கிறார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், டி இம்மான், ஜிப்ரான் உள்ளிட்டோர் இசையமைக்கிறார்கள். அதோடு, சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் பொது நலனுகாக உருவாக்கபடும் இந்த நவரசா புராஜக்ட்டில் பங்கேற்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"