விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள், மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும். தொடர்ந்து இப்போது குக் வித் கோமாளி சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, டிடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, KPY வினோத் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், இதில் போட்டியாளராக உள்ள பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் செயலால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கோமாளிகள் எப்போதும் போல் குக் மற்றும் நடுவர்களை கிண்டல் செய்து கலாய்கின்றனர். ஆனால் இதை காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் பிரியாங்கா தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு நடப்பதாக அவர் மீது ரசிகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.
குறிப்பாக பிரியங்கா புகழுடன் மோதல் போக்கில் நடப்பதாக கூறியுள்ளனர். இது உண்மையான சண்டையா, இல்லை நிகழ்ச்சிக்காக இயக்குனர் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டா என்றும் தெரியவில்லை.
தனது கோமாளியை மாட்டி விட்டதால் புகழ் மீது பிரியங்கா கோபமாக இருப்பதாகவும் காட்டினர். மேலும், பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் என்றாலும் தொகுப்பாளர் போலவே செயல்படுகிறார் எனவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, பிரியங்கா இது போல் நடந்து கொள்வதால் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, பிக் பாஸ் நிகழ்ச்சி போல மாற்றி வருகிறார். அவரை சீக்கிரம் இந்த ஷோவில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“