பாபு:
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சென்றவாரம் வெளியான லக்ஷ்மி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடன விரும்பிகள் பிரபுதேவா ராக்ஸ் என்றனர். பொதுவான பார்வையாளர்கள் படம் படுத்துகிறது என நொந்து கொண்டனர்.
லக்ஷ்மி படத்தின் கதை ஹாலிவுட்டில் வெளியான கோகோ அனிமேஷன் படத்தின் ஒன் லைனிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் கிளைமாக்ஸை ரியல் ஸ்டீல் ஆங்கிலப் படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள். இப்படி ஹைடெக்காக சுட்ட லக்ஷ்மியின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எப்படி உள்ளது? நயன்தாராவின் கோலமாவு கோகிலாவை முந்தியதா?
லக்ஷ்மி வெளியானதற்கு ஒருவாரம் முன்பு கோலமாவு கோகிலா வெளியானது. சென்ற வார இறுதியில் போட்டி பிரபுதேவாவின் லக்ஷ்மிக்கும், நயன்தாராவின் கோலமாவு கோகிலாவுக்கும்தான். இதில் வெற்றி பெற்றது யார் என்பதை பார்க்கும் முன், கோலமாவு கோகிலாவின் ஓபனிங் சென்னை பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங் பார்ப்போம்.
இரண்டு வாரம் முன்பு வெளியான கோலமாவு கோகிலா விஸ்வரூபம் 2 படத்தை வீழ்த்தி சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்றது. சுமார் 264 திரையிடல்களில் 1.61 கோடியை அப்படம் வசூலித்தது. முன்னணி நடிகர்களுக்கு இணையான வசூல்.
வார நாள்களில், அதாவது திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் மொத்தம் 310 திரையிடல்ககளில் சுமார் 1.27 கோடியை வசூலித்தது. இதுவும் நல்ல வசூலே. இரண்டாவது வார இறுதியில், அதாவது சென்ற வார இறுதியில் சுமார் 212 திரையிடல்களில் 1.04 கோடியை வசூலித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வார இறுதியிலும் ஒரு கோடியை கோலமாவு கோகிலா கடந்துள்ளது. நாயகி மையப்படங்களில் இதுவொரு மைல் கல். ஆக, முதல் பத்து தினங்களில் கோலமாவு கோகிலாவின் சென்னை வசூல் 3.94 கோடிகள். அடுத்த வாரம் விஸ்வரூபம் 2 படத்தின் சென்னை வசூலை நயன்தாரா படம் முறியடிக்கும்.
லக்ஷ்மிக்கு வருவோம். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 192 திரையிடல்களில் 72.20 லட்சங்களை வசூலித்துள்ளது. இது கோலமாவு கோகிலாவின் ஓபனிங் வசூலை மட்டுமில்லை, இரண்டாவது வார இறுதி வசூலையும்விட குறைவு. சென்ற வாரம் கோலமாவு கோகிலா சுமார் 212 திரையிடல்களில் 1.04 கோடியை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள, லக்ஷ்மிக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது.
லக்ஷ்மி படத்தின் ஓபனிங் தமிழகம் முழுவதும் சுமாராகவே உள்ளது. வடமாநிலங்களிலும் படம் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. பிரபுதேவா என்ற பிராண்டட் பெயர் இருந்தும் லக்ஷ்மி பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. தோல்வியின் நாயகன் ஏ.எல்.விஜய்யின் கரியரில் மற்றுமொரு மகத்தான தோல்விப்படமாகியிருக்கிறது லக்ஷ்மி.