விஜய் டிவி கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 இன்று (அக்டோபர் 3) மாலை தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், இதற்கு ஒரு தனி மவுசும் மக்கள் மத்தியில் உண்டு.
இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்ற அறிவிப்பு வெளியானதுமே, வதந்திகள் பரவத் தொடங்கின. ஒரு பக்கம் இவர்கள் தான் போட்டியாளர்கள் என வீடியோ போடும் யூடியூப் சேனல்களும், மற்றொரு பக்கம் எப்படா ஒளிபரப்பு செய்வாங்க மீம் போட்டு கலாய்க்கலாம் என மீம் கிரியேட்டர்ஸும் காத்திருக்கிருக்கின்றனர்.
கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் பிக் பாஸ் வீட்டில் இந்தாண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று, பிக் பாஸ் வீட்டின் தோற்றத்தை காட்டும் ப்ரோமோவை விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டது.
அந்த ப்ரோமிவில், " பிக் பாஸ் வீட்டின் வாசலில் 5 என்கிற எழுத்து மிக பெரிதாக வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மீது கமல் நின்று கொண்டு, 5 என்று தனது கைகளில் காட்கிறார். இறுதியாக ஆரம்பிக்கலாமா? என அவரது வசனத்துடன் முடிவடைகிறது. இதை பார்த்த பலரும் பிரமாண்டத்திற்கு பஞ்சம் இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டைப் பார்க்கும் போதே ஒரு விதமான ஈர்ப்பை ஏற்படுத்தும் வண்ணங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துள்ளது.
எப்போதும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் டிஆர்பியில் முதலில் இருக்கும் விஜய் டிவிக்கு இந்தாண்டு சறுக்கல் ஏற்படலாம். ஏனென்றால், வீரர்களுக்கு கரோனா பாதிப்பால் தள்ளிச்சென்ற ஐபிஸ் தொடர், தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.
அதே போல, டி20 உலக கோப்பை 2021 வும் விரைவில் தொடங்கவுள்ளது. இதன் காரணமாக, எதை பார்க்கலாம் என்ற குழப்பம் கிரிக்கெட் பிரியர்களிடமும், ரியாலிட்டி ஷோ பிரியர்களிடமும் ஏற்படலாம்.