பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பெயரில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இந்த லிங்க்கைத் தொட்டால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று ஒரு மோசடி பரவி வருகிறது. இந்த மோசடி குறித்து ஆல்யா மானசா எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பேசுவது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆல்யா மானசா இப்படித்தான் சம்பாதிக்கிறார். நீங்களும் கோடீஸ்வரர் ஆகணுமா? நீங்களும் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்று வலை விரிக்கப்படுகிறது. அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை தொட்டு உள்ளே சென்றால், ரூ.25,000 முதலீடு செய்யுங்கள் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு மோசடி வலை விரிக்கப்படுகிறது. நடிகை ஆல்யா மானசா இது ஒரு மோசடி, தான் அப்படி பேசவே இல்லை, யாரும் அப்படி பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள் என்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்து அனைவரையும் அலெர்ட் செய்திருக்கிறார்.
இது குறித்து ஆல்யா மானசா கூறியிருப்பதாவது “உண்மையில் இது ஒரு பொய்யான செய்தி, இது ஒரு மோசடி, இதுல என்னை பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் இது போல தப்பா எதுவுமே பேசவில்லை. நீங்கள் இவ்வளவு காசு போட்டால் இவ்வளவு லட்சங்கள் சம்பாதிக்கலாம், நானும் இப்படித்தான் சம்பாதித்தேன் என்று வீடியோவில் வருவது போல, அப்படி நான் எதுவுமே தப்பா பேசவில்லை. உண்மையில் நான் அப்படி சம்பாதிக்கவே இல்லை. எப்போதும் போல, எல்லா மக்களும் சம்பாதிப்பதைப் போலதான் சம்பாதிக்கிறேன். படிப்படியா முன்னேறி, நிறைய புராஜெக்ட், டிவி சீரியல் பண்ணி, அதுல எனக்கு வர சம்பளத்தை வைத்து வீடு, கார் லோன்ல வாங்கி, அந்த கடனை எந்த பிரச்னையும் இல்லாமல் சூப்பரா கட்டிட்டு வருகிறேன். அதனால், எனக்கு இன்னும் லோன் கிடைக்கிறது. அதனால், என்னால் வாங்க முடிகிறது. அப்படித்தான் போய்கிட்டு இருக்குதே தவிர, எதிலும் இன்வெஸ்ட் பண்ணி நான் பணம் வாங்குகிறேன் என்பது போல நான் எதுவுமே பண்ணவில்லை. என்னுடைய பெயரை யூஸ் பண்ணி, ஆல்யா சம்பாதித்த மாதிரி நாமும் சம்பாதிக்கலாம் என்று நினைத்து நிறைய பேர் ஏமாற வாய்ப்பு இருக்கிறது என்று மோசடி செய்திருக்கிறார்கள். அதனால், இது போல வரும் எந்த வீடியோவையும் நம்பாதீர்கள், அதில் வரும் லிங்க்கைத் தொடாதீர்கள். பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள்” என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோசடி குறித்து ஆல்யாமானசா, சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“