புதுப்படங்கள் ரிலீஸ் : இரண்டாவது வாரமாக ஏமாந்துபோன தமிழ் சினிமா ரசிகர்கள்

கேளிக்கை வரி விதிப்பால் திரையுலகம் ஸ்டைக்கில் குதிக்க, கடந்த 2 வாரங்களாக புதிய தமிழ் படங்கள் வெளியாகாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழனைப் பொறுத்தவரைக்கும் சினிமா என்பது ரத்தத்தில் ஊறிய விஷயம். சாப்பிடக்கூட காசில்லாதவர்கள் கூட எப்பாடுபட்டாவது படங்கள் பார்த்த வரலாறு நம்மிடம் நிறையவே உண்டு. அப்படிப்பட்டவனை இன்றைய சினிமா உலகம் ஏமாற்றிக் கொண்டிருப்பதுதான் வேதனையான விஷயம்.

100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட்டிற்கு 28 சதவீதமும், 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டிற்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரியாக விதித்திருந்தது மத்திய அரசு. இதனால், கிட்டத்தட்ட 35 ரூபாய் வரை ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் அதிகமாக வைத்து விற்பனை செய்தனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

ஏற்கெனவே, அதிக பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் கட்டணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் சினிமா ரசிகன், இந்த டிக்கெட் கட்டண உயர்வால் ரொம்பவே பாதிக்கப்பட்டான். இதனால், அதுவரை திரையரங்கில் மட்டுமே படம் பார்க்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தவர்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் தரவிறக்கம் செய்து பார்க்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், கேளிக்கை வரி என தமிழக அரசு 10 சதவீதத்தை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், இந்த வரியைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத தமிழக அரசு, வேண்டுமானால் டிக்கெட் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது.

அப்படியே கட்டணத்தை உயர்த்தினாலும், இந்த வரி என்பது சுமையாகவே இருக்கும் என்று கூறிய திரையரங்கு உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும், கடந்த 6ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

அதன்படி, கடந்த 6ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய ‘விழித்திரு’, ‘களத்தூர் கிராமம்’, ‘திட்டிவாசல்’ உள்ளிட்ட 6 படங்கள் கிடப்பில் போடப்பட்டன. அத்துடன், 5ஆம் தேதியே ரிலீஸான துல்கர் சல்மானின் ‘சோலோ’ படம் கூட 6ஆம் தேதியில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரிலீஸான படங்களையே தொடர்ந்து ஓட்டி வருகின்றனர்.

விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும், படங்களை ரிலீஸ் செய்யலாம் என்ற தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நினைப்பில் மண் விழுந்திருக்கிறது. 7 நாட்களாகியும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசுடன் சினிமா நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை, இன்னும் இழுபறியிலேயே சென்று கொண்டிருக்கிறது.

நமக்குக் கிடைத்த தகவல்படி, 10 சதவீத கேளிக்கை வரியை இரண்டு சதவீதமாகக் குறைக்கும்படி சினிமா நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் 5 சதவீதம் மட்டுமே குறைக்க முடியும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

நாளை வெள்ளிக்கிழமை… இன்றைக்காவது புதுப்படம் ரிலீஸாகாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஏமாற்றத்தையே தரப்போகின்றன தமிழக அரசும், சினிமா சங்கங்களும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close