சூர்யா, நடிப்பில் காட்டிய உழைப்பை, அதில் சிறு பங்கை கூட இயக்குநர் செல்வராகவன் காட்டியிருந்தால், படம் ஓரளவிற்காவது சிறப்பாக வந்திருக்கும்...
ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் செல்வராகவன், சூர்யா, சாய் பல்லவி, ரகுல்பிரீத் சிங் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியாகியுள்ள படம் - என்ஜிகே.
மக்களின் இந்த அரசியல் பரபரப்பை ஒரு பரபரப்பான அரசியல் படத்தை கொடுத்து மெஜாரிட்டியை பெறுவதை விட்டுவிட்டு, இப்படி டெபாசிட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற நிலைக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
கொஞ்சம் எல்கேஜி, கொஞ்சம் நோட்டா, கொஞ்சம் நிகழ்கால அரசியல் காமெடி ஆகியவை கலந்த ஒரு கலவைதான் இந்த என்ஜிகே. இறங்கி விளையாட வேண்டிய கதையில், எட்டி நின்று விளையாடியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
புதுப்பேட்டை படத்தின் திரைக்கதையை அப்படியே என்ஜிகேவுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ செல்வா என்றே எண்ணத் தோன்றுகிறது. புதுப்பேட்டையில் ஜெயிலுக்குள் இருந்தபடி கொக்கி குமார் தனது கதையை சொல்வது போல், இப்படத்தில் எக்ஸ்ட்ரீம் குளோஸ்அப் ஷாட்டில், எங்கோ அமர்ந்தபடி கதை சொல்கிறார் சூர்யா. ஆனால், கொக்கிகுமார் அளவுக்கு நம் மனதில் சூர்யா பதியவில்லை என்பது தான் உண்மை.
படத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.
இயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை.
மொத்தத்தில், என்ஜிகே - நந்தகோபாலன் குமரன் இல்லை ; நொந்த கோபாலன் குமரன்