ஆங்கிலத்தில் படிக்க...
தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு நடிகர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ள நடிகை நித்யா மேனன் இது தொடர்பான வதந்திகள் பரப்புவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், நடிப்பில் கடைசியாக தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்து வெளியான திருச்சிற்றம்பலம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகி வரும் அவரின் 50-வது படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் ஒரு அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் நடிகர் ஒருவர் நடிகை நித்யா மேனனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. அந்த பதிவில், “தெலுங்கு திரையுலகில் நான் இதுவரை எந்த பிரச்சனையும் சந்தித்ததில்லை, ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு தமிழ் ஹீரோ என்னை துன்புறுத்தினார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. “பத்திரிகையின் சில பிரிவுகள் இந்த மாதிரியான செய்திகளை பரப்பும் வேலைகளில் இறங்கியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. தயவு செய்து உண்மையான செய்திகளை கொடுப்பதில் சிறந்தவராக இருங்கள் என்று நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், நாம் அனைவரும் இவ்வளவு குறுகிய காலத்திற்கு இங்கே இருக்கிறோம். அதுவரை நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் இன்று இந்த தவறான செய்தியை சுட்டிக்காட்டுகிறேன், ஏனென்றால் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்று கூறியுள்ள நித்யா மேனன், மீடு இயக்கம் குறித்து கூறுகையில், “மக்கள் எதிர்கொள்ளும் விஷயத்தை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். அதை எதிர்க்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். நான் அதை ஒரு வழியில் செய்யவில்லை என்பதற்காக, நான் அந்த விஷயங்களை எதிர்க்கவில்லை என்று அர்த்தமல்ல. இந்த விஷயத்தில் எனக்கு வேறு அணுகுமுறை உள்ளது.
ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் தான் ஒரு படத்தில் இருந்து வெளியேறியதை ஒப்புக்கொண்ட நித்யா மேனன்,நான் அதை செய்கிறேன், ஆனால் அமைதியாக செய்கிறேன். அது போன்ற காரணங்களால் ஒரு படத்துக்கு ‘நோ’ சொல்லிவிட்டேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“