scorecardresearch

நடிகர் விஜய்க்கு சமூக பொறுப்பு இல்லையா? சர்ச்சையில் மாஸ்டர் ரிலீஸ்

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக பல வகையில் எதிர்ப்பு எழுந்துள்ளதால் மாஸ்டர் பட ரிலீசில் சர்ச்சை எழுந்துள்ளது.

பிகில் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மேகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவினால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மாஸ்டர் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாரவும் அபாயம் இருப்பதால், தியேட்டர்களில் 50%  இருக்கைகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காது என்பதால் படக்குழு பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.

இது தொடர்பாக கடந்த வாரம் முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் மாஸ்டர் படம் வெளியாகும்போது தியேட்டர்களில், 100%  இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அதன்பிறகு ஊரடங்கில் நிலுவையில் உள்ள தடை உத்தரவு டிசம்பர் 31-வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த முதல்வர் தியேட்டர்களில் இருக்கைகள் தொடர்பாக எவ்வித தகவலும் வெளியிடவில்லை. இதனால் விஜயின் கோரிக்கையை அரசு நிராகரித்ததாக செய்திகள் பரவியது.

தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில். விஜய் மற்றும் சிம்பு ஆகியோரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு நேற்று முன்தினம் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

இதனால் அடுத்தடுத்து திரைப்படங்களை வெளியிட தமிழ் திரையுலகம் தயாராகி வரும் நிலையில், தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா எளிதில் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் தமிழக அரசு இந்த அரசாணையை திரும்ப பெறவேண்டும் என சமூக வளைதளங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. மேலும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுகாதார வல்லுனர்கள் பூட்டிய அறைக்குள் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனா எளிதில் பரவ வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.

இது குறித்து அரவிந்த் சீனிவாசன் என்ற இளம் மருத்துவர் தனது பேஸ்புக் பக்கத்தில், டியர் விஜய் சார், சிலம்பரசன் சார், தமிழக அரசே… நாங்கள் அனைவரும் சோர்வில் உள்ளோம், காவல் துறையினரும், சுகாதாரப்பணியாளர்களும் கூட சோர்வில் உள்ளனர். இதுவரை பார்த்திராத ஒரு கொடிய தொற்று நோயை எதிர்த்து போராடவேண்டிய நிலையில், தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்தது ஒரு தற்கொலை முயற்சி.

நாங்கள் அதிகளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முயற்சித்து வருகிறோம். எங்கள் முன் கேமரா இல்லை, எங்களுக்கு சண்டை காட்சிகள் இல்லை. ஆனாலும் நாங்களும் ஹீரோக்கள் தான். சிலரது சுயநலம் மற்றும் பேராசைக்கு இரையாக நாங்கள் விரும்பவில்லை. 100 % இருக்கைக்கு அனுமதி கேட்ட நடிகர்கள் கொள்கை வகுப்பாளர்கள் என யாரும் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்க போவதில்லை. இது ஒரு ஆபத்தான முடிவு என்பதை விளக்க நினைத்தேன். இதை நான் சொல்லி என்ன பயன்? இப்படிக்கு ஒரு ஏழை மருத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தியேட்டகளில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில்,  தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது. இப்போது கொரோனா வைரஸ், சீனா வைரஸ் என்று அழைக்கிறோம். அது சினிமா வைரஸ் என்ற பெயரை எடுக்க வேண்டுமா? இந்த ஆபத்தான முடிவை முதலமைச்சரும், நடிகர்களும், தியேட்டர் அதிபர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். என தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகை கஸ்தூரியின் ட்விட்டுக்கு பதில் கொடுத்துள்ள நடிகை குஷ்பு, தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்த அரசுக்கு நன்றி. இதன் மூலம் சினிமாதுறை செழிக்கும். திரையரங்குகளால் பெரிய அளவில் தொற்று எங்கும் இல்லை. கவலைப்படும் மாற்று கருத்து உள்ளவர்கள் தயவு செய்து தியேட்டருக்கு செல்ல வேண்டாம். உங்களை யாரும் தியேட்டருக்கு வருமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து திரையுலகினரிடம் மட்டுமே வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் ஒருசில திரை பிரபலங்களும், சுகாதார வல்லுனர்களும் இந்த அரசாணைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பரபரப்பு நிலவி வரும் நிலையில், இது குறித்து விஜய் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்த அரசாணைக்கு வரும் எதிர்கருத்துக்களை மனதில் வைத்து, தமிழக அரசு இந்த சட்டத்தை வாபஸ் பெறுமா? அல்லது ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் தீர்க்கமான முடிவு எடுப்பாரா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: No social responsibility for actor vijay master release in controversy

Best of Express