/indian-express-tamil/media/media_files/2025/08/27/manivannan-2025-08-27-18-06-25.jpg)
17 நாளில் உருவான கேப்டனின் மெகா ஹிட் படம்; உதவி இயக்குனர்கள் இல்லாமல் வேலை செய்த மணிவண்ணன்: எந்த படம் தெரியுமா?
‘மிஸ்டரி திரில்லர்’ ஜானரில் 1984-ல் வெளிவந்த ‘நூறாவது நாள்’ திரைப்படம் தலைப்பின் சென்டிமென்ட்டிற்கு ஏற்ப, நூறு நாள்களையும் தாண்டி ஓடி மகத்தான வெற்றியை அடைந்த படம். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய ‘சிகப்பு ரோஜாக்கள்’ பாணியில் ஒரு கிரைம் திரில்லரை தர முயன்றிருந்தார் மணிவண்ணன். 2 பிரதான காரணங்களுக்காக இந்தத் திரைப்படம் இன்றும் கூட ரசிகர்களின் மனதில் நிழலாடுகிறது. ஒன்று, சத்யராஜ் மொட்டைத் தலையுடன் வில்லத்தனம் காட்டியது. இரண்டாவது, ‘இதில் வரும் சித்திரிப்புகளை பார்த்துத்தான் பிணங்களைச் சுவரில் மறைத்தேன்’ என்று ஆட்டோ சங்கர் தந்த வாக்குமூலம் அப்போது பரபரப்பாகக் கவனிக்கப்பட்டது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் மணிவண்ணன் சிறந்த நடிகர். பின்னர் தான், அவர் 'அமைதிப்படை' போன்ற பல படங்களை இயக்கிய திறமையான இயக்குநர் என்பது தெரியவந்தது. அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்களில் ஒன்றான 'நூறாவது நாள்' திரைப்படம், எப்படி உருவானது என்பது பற்றிய சுவாரசியமான தகவல்களை கேப்டன் பிரபாகரன் படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
17 நாட்களில் உருவான திரில்லர் கிளாசிக்
நடிகர்கள் மோகன், விஜயகாந்த், சத்யராஜ் போன்றோரின் நடிப்பில், 'நூறாவது நாள்' திரைப்படத்தை வெறும் 17 நாட்களில் படமாக்கி முடித்தார் மணிவண்ணன். அவரது முதல்படமான கோபுரங்கள் சாய்வதில்லை மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, பல தயாரிப்பாளர்கள் அவரை அணுகினர். அப்படி உருவான படங்களில் ஒன்றுதான் 'நூறாவது நாள்'. தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரில்லர் படங்களைப் பட்டியலிட்டால், இப்படத்துக்கு அதில் ஒரு தனி இடம் உண்டு. நிஜ வாழ்க்கையில் நடந்த ஆட்டோ சங்கர் போன்ற கொடூரமான கொலைகளின் சாயலை வைத்து இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
மணிவண்ணன் இயக்கம் தொடங்கிய இரண்டாவது ஆண்டான 1984-ல் மட்டும் ஆறு திரைப்படங்களை இயக்கினார். 'நூறாவது நாள்' மட்டுமல்ல, மற்றொரு சிறந்த திரில்லர் படமான '24 மணி நேரம்' படத்தையும் அதே ஆண்டில்தான் இயக்கினார். அந்த 6 படங்களில் நடிகர் மோகன் 3 படங்களிலும், சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் 2 படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.