பாபு:
திரைத்துறையில் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருப்பது அத்தனை சுலபமில்லை. கிட்டத்தட்ட டெண்டுல்கரைப் போல. எண்பது ரன்கள் அடித்தாலும், இப்பவெல்லாம் சச்சின் சொதப்புறாரு, செஞ்சுரி அடிக்கிறது இல்லை என்று எளிதாக கூறிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இதுவே ஹர்பஜன் பதினாறு ரன்கள் அடித்தால், சூப்பரில்ல என்று கொண்டாடுவார்கள். சல்மான் கானின் நிலைமையும் அப்படித்தான் உள்ளது.
சல்மான் கான் நடித்திருக்கும் ரேஸ் 3 திரைப்படம் இந்தியாவில் சுமார் 160 கோடிகளை வசூலித்திருக்கிறது. சல்மான் கான் என்ற தனிமனிதனை நம்பி எடுத்த படம். இதே கதையில் வேறு ஒருவர் நடித்திருந்தால் ஒன்றரை நாளில் படத்தை தியேட்டர்களைவிட்டு தூக்கியிருப்பார்கள். வசூல்? தயாரிப்பாளர் காசியில் போய் செட்டிலாக வேண்டியதுதான். ரேஸ் 3 இன் வசூல் முழுக்க சல்மான் கான் என்ற சூப்பர் ஸ்டாரின் ஸ்டார் அந்தஸ்துக்கு கிடைத்தது.
ரேஸ் 3 தோல்விப்படம், சுமாரான வNல் என்று சல்மான் கான் அதிருப்தியாளர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். பலருக்கும் இது சரி என்றேபடுகிறது. காரணம் சல்மான் கான்தான் 300 கோடிகளுக்குமேல் இந்தியாவில் வசூலித்த மூன்று படங்களுக்கு சொந்தக்காரர். அவரது டைகர் ஜிந்தா ஹே, சுல்தான், பஜ்ரங்கி பைஜான் படங்கள் 300 கோடிகளுக்கு மேல் இந்தியாவில் வசூல் செய்தன. அதனுடன் ஒப்பிட்டால் ரேஸ் 3 இன் வசூல் மிகக்குறைவு. சல்மான் படம் குறைந்தது 200 கோடிகளாவது வசூலிக்க வேண்டாமா என்கிறார்கள். வெளிநாடுகளிலும் இதுதான் நிலைமை. படம் இதுவரை 66 கோடிகளை வெளிநாடுகளில் வசூலித்த போதிலும், இது பத்தாதே என்று நாடியை இடிக்கிறார்கள். இதில் விசேஷம், இப்படியொரு வசூலை அக்ஷய் குமார், அஜய்தேவ் கான் படங்கள் பெற்றிருந்தால் அந்தப் படங்கள் சூப்பர் ஹிட் லிஸ்டில் இணைந்திருக்கும்.
2014 இல் சல்மான் கானின் ஜெய் ஹே படம் வெளியானது. படம் முதல் மூன்று தினங்களில் 60 கோடிகளை கடந்து வசூலித்தது. மொத்தமாக இந்தியாவில் 116 கோடிகள். வெளிநாடுகள், தொலைக்காட்சி, டிஜிட்டல், ஆடியோ உரிமைகளை சேர்த்தால் 200 கோடிகளை படம் சாதாரணமாக தாண்டும். ஆனால், படம் தோல்வி என்றனர். சல்மான் கானும், ஜெய் ஹேn தோல்வி என்று அறிவித்தார். அன்று அக்ஷய், அஜய்தேவ் கான் படங்கள் 100 கோடியை வசூலித்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.
இதேகதைதான் காலாவில் ரஜினிக்கும் நடந்திருக்கிறது. காலா சென்னையில் 11 கோடிகளை வசூலித்துள்ளது. மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என சொல்லப்பட்ட வேதாளம், விக்ரம் வேதா, ரெமோ, வேலையில்லா பட்டதாரி படங்களைவிட மிக அதிகம். சமீபத்திய ஹிட் படமான இரும்புத்திரையைவிட சுமார் 4 கோடிகள் அதிகம் வசூலித்துள்ளது. ஆனாலும், காலா சுமாராக வசூலித்த படம். வெளிநாடுகளிலும் இதேதான் நிலை. யுஎஸ்ஸில் பதினைந்து கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது காலா. ஆனால், சுமாரான வசூல். பிற தமிழ் நடிகர்களின் படங்கள் இரண்டு கோடிகளை கடந்தாலே சூப்பர்ஹிட். பத்து கோடிகளைக்கூட பிற நடிகர்களின் படங்கள் யுஎஸ்ஸில் தொடுவதில்லை.
சல்மான் கானின் ரேஸ் 3 க்கு வருவோம். அப்படம் தொலைக்காட்சி, டிஜிட்டல், ஆடியோ என திரையரங்கு வசூலை தவிர்த்தே சுமார் 200 கோடிகள் லாபம் சம்பாதித்து தந்திருக்கிறது. தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை பெரும் திருப்தி. ஆனாலும், அவரது பிற படங்களை வைத்து இந்தியாவில் 160 கோடிகள் வசூலித்தும், தோல்விப் படம், சுமார் படம் என்கிறார்கள். காரணம், எளிமையானது. ரஜினியைப் போல சல்மான் இந்தியின் சூப்பர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டாராக இருப்பது அத்தனை சுலபமில்லை என்பது புரிந்திருக்குமே.