எதிரிக்கும் நண்பன் - அஜித்தின் மறுபக்கம்

ரசிகர் மன்றங்கள் வேண்டாம், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அஜித் ரசிகர்களை விலக்கி வைத்திருப்பதும் அவர்களின் சுயமரியாதையை மதித்துதான்.

பாபு

அஜித்தின் படங்கள் தெரியும், நடிப்பு தெரியும், அவரது குடும்பம் தெரியும், அவரது குணமும் தெரியும். அவர் வாழ்க்கையில் நடந்த சில முக்கிய சம்பவங்கள்? அதில் வெளிப்படும் அவரது மனிதாபிமானம்? அனேகமாக யாருக்கும் தெரியாது.

சினிமாவில் நுழைந்த அஜித்தை கைத்தூக்கிவிட யாரும் இருக்கவில்லை. அவராகவே மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தார். தடைகளை சந்தித்தார். தவழ்ந்து, எழுந்து, நடந்து இன்று அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை மிகவும் சிரமப்படுத்தியது விபத்தின் காரணமாக முதுகுத்தண்டில் அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சை.

இனி அஜித்தால் எழுந்து நடமாட முடியாது என்று அனைவரும் நம்பிய நேரம், அதிலிருந்து மீண்டு வந்து அனைவரும் ஆச்சரியப்படும்வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அன்று அஜித்துக்கு அட்வான்ஸ் தந்து, அவரால் நடிக்க முடியாது என்ற நம்பிக்கையால் வேறொருவரை வைத்து படம் தயாரித்தார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அஜித் தேறி வந்த பிறகு தனது தவறை உணர்ந்து கொண்டார். அஜித், ரத்னத்துக்கு இடையேயான இந்த உரசல் காரணமாக ரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்கவில்லை.

ajith -gvm

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் அஜித்

பிரமாண்ட படங்களை எடுத்து உச்சத்தில் இருந்த ரத்னம் தனது மகன்களின் படங்களை தயாரித்தும், பீமா போன்ற படங்களில் கோட்டைவிட்டும் கடனாளியானார். அவரது உடமைகள் ஒவ்வொன்றாக அவரைவிட்டு சென்றது. இந்தியன், தூள், ரன், சிவகாசி, முதல்வன், கில்லி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் கடைசியில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. ரத்னம் தயாரிப்பில் ஹிட் படங்களில் நடித்த எந்த ஹீரோவும் ரத்னத்துக்கு உதவ முன்வரவில்லை. அந்த நேரத்தில் ரத்னத்தை அழைத்து கால்ஷீட் தந்தார் அஜித். அப்படித்தான் ஆரம்பம் படத்தில் ரத்னம் மீண்டும் தயாரிப்பாளரானார். அந்த ஒரே படத்தில் தனது மொத்த கடன்களையும் அடைத்தார். அஜித் தந்த வேதாளம், என்னை அறிந்தால் வாய்ப்புகள் அவரை மீண்டும் மதிப்புக்குரிய தயாரிப்பாளராக்கியது.

இன்னொரு சம்பவம். கௌதம் அஜித்தை இயக்குவதாக முடிவானது. வழக்கம் போல் கௌதம் கதையை கூறவில்லை. மேலும், பல காரணங்கள். அவர்கள் இணையும் படம் தள்ளிப் போனது. அஜித்துக்காக காத்திருக்க அவர் என்ன கமலா இல்லை சூர்யாவா என்று தனது வழக்கமான ஹைபிட்சில் வார்த்தைகள்விட்டார் கௌதம். அஜித், கௌதம் இணைவது நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.

இதன்பிறகு விஜய்யை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த யோகன் – அத்தியாயம் ஒன்று ட்ராப்பானது. சூர்யாவை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த துருவநட்சத்திரம் கைவிடப்பட்டது. சுற்றிலும் கடன். இயக்குவதாக இருந்த படங்கள் ஒவ்வொன்றாக கைநழுவிப்போகும் நிலை. கையறுநிலையில் சிம்புவிடம் அடைக்கலம் புகுந்தார். அந்த நேரத்தில் அஜித்தே அழைத்து தந்த வாய்ப்பு என்னை அறிந்தால். அந்தப் படம் மட்டும் அப்போது கிடைக்கவில்லை எனில் கௌதமின் நிலை இன்னும் மோசமானதாக ஆகியிருக்கும்.

இவை இரண்டும் உதாரணங்கள். இதேபோல் பல உள்ளன. ஆஞ்சநேயா படப்பிடிப்பில் நடந்ததைச் சொன்னால் அஜித்தின் இன்னொரு சுயமரியாதை முகம் தெரியவரும்.

அந்தப் படத்தில் தார் ரோடு போடும் இடத்தில் சண்டை நடப்பது போல் காட்சி. சேலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் ரோடு போடும் வேலையை செய்தனர். அதில் ஒரு பெண் தனது குழந்தையை அஜித்திடம் கொண்டு வந்து பெயர் வைக்கும்படி கேட்டார். அஜித் மறுத்தார். குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமை குழந்தையின் பெற்றோருக்குதான் உண்டு. அந்த உரிமையை வேறெnருவருக்கு தராதீர்கள் என்றவர், உங்களுக்குப் பிடித்த கடவுள் பெயரோ இல்லை, உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் பெயரையோ குழந்தைக்கு வையுங்கள் என்று கடைசிவரை அந்த குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை.

ரசிகர் மன்றங்கள் வேண்டாம், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று அஜித் ரசிகர்களை விலக்கி வைத்திருப்பதும் அவர்களின் சுயமரியாதையை மதித்துதான். அந்த வகையில் அஜித் சிறப்புக்குரியவர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close