"ஒரு கிடாயின் கருணை மனு" விமர்சனம்

ஒரு திருவிழா, ஒரு பயணம், ஒரு விபத்து. இதை வைத்துக்கொண்டு இவ்வளவு சுவையாகவும் அழுத்தமாகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியுமா என வியக்க வைக்கிறார் இயக்குனர்....

விலங்குகளுக்கு எதிரான வதை அரசியல் சர்ச்சையாகவும் போராட்டங்களின் மையமாகவும் ஆகியிருக்கும் இந்தக் காலத்தில் விலங்குகளின் உயிரைப் பற்றிப் பேசுகிறார் இயக்குநர் சுரேஷ் சங்கய்யா. ஒரு கிடாயின் பார்வையில் இந்தப் பிரச்சினையை அவர் அணுகியிருக்கிரார்.

ஊர் மக்கள் குலதெய்வக் கோயிலில் ஆட்டைப் பலி கொடுக்கும் நிகழ்ச்சியைப் பின்புலமாகக் கொண்டு இயக்குநர் கதை சொல்கிறார். விதார்த்தும், ரவீனா புதுமணத் தம்பதிகள். இவர்களுக்குத் திருமணம் ஆன கையோடு ஊரே திரண்டு குலதெய்வம் கோவிலுக்கு ஆட்டைப் பலி கொடுக்கச் செல்கிறது.
கோயிலை நெருங்கும் இடத்தில் ஒரு விபத்து நடந்துவிடுகிறது. இவர்கள் செல்லும் லாரியில் அடிபட்டு ஒருவர் இறந்துவிடுகிறார். எல்லோரும் லாரி டிரைவரைத் திட்டுகிறார்கள். ஆனால், அந்த விபத்து நடந்தபோது வண்டியை ஓட்டியது டிரைவர் அல்ல. புது மாப்பிள்ளை விதார்த்.

புது மாப்பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக முயற்சியில் எல்லோரும் விபத்தை மறைக்க முயல்கிறார்கள். ஆனால், அந்த விபத்தில் இறந்தவரைத் தேடி ஒரு சிலர் தேடி வருகிறார்கள். விபத்தை மறைக்க இவர்கள் துடிக்க, இழந்துவிட்ட உயிருக்காக அவரைச் சேர்ந்தவர்கள் துடிக்கிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.

விபத்தைப் பற்றிய இந்தப் படத்துக்கும் கிடாரிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். மனித உயிரைக் குறித்து இவ்வளவு கவலை கொள்ளும் சக மனிதர்கள், ஆடு, மாடுகளைப் பற்றி ஏன் கவலையேபடாமல் வெட்டித் தள்ளுகிறார்கள் என்பதுதான் கதையின் அடிநாதம். இப்படிப்பட்ட ஒரு கதையை இத்தகைய வித்தியாசமான கோணத்தில் சொன்னதற்காக இயக்குநர் சுரேஷ் சங்கய்யாவைப் பாராட்டியாக வேண்டும்.

ஒரு கிடாவின் பார்வையில் மனிதர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தும் முதல் காட்சியிலேயே இயக்குனர் கவர்ந்துவிடுகிறார். ஊரே திரண்டு கோயிலுக்குச் செல்லும் காட்சிகள் மிக இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. விபத்தை மறைப்பதற்கான முயற்சிகளிலும் இயல்புத் தன்மை மாறவில்லை. இறந்தவரைத் தேடி வருபவர்களின் தவிப்பும் நன்கு பதிவாகியுள்ளன. அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் புது மணத் தம்பதிகளுக்கிடையே நடக்கும் சீண்டல்கள் ரசனையோடு எடுக்கப்பட்டுள்ளன. இத்தனையையும் தாண்டி ஒரு கிடாரியின் உயிரைப் பற்றிய கரிசனத்தை முன்னிறுத்தும் இடம் நெகிழவைக்கிறது.

விதார்த், அறிமுக நாயகி ரவீணா ஆகிய இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் பாத்திரத்தில் விதார்த் அசரவைக்கிறார். படத்தில் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள்கூட நன்கு நடித்திருக்கிறார்கள். கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு, உடல் மொழி, குசும்பு என எல்லாமே அருமையாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

ரகுராமின் இசை படத்துடன் மிக நெருக்கமாகப் பயணம் செய்கிறது. வேல்முருகன், குருநாதன் ஆகியோர் எழுதியுள்ள பாடல் வரிகளும் ரசிக்கவைக்கின்றன. சரணின் ஒளிப்பதிவு படத்தின் இயல்புத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. ப்ரவீணின் எடிட்டிங்கில் இரண்டு மணிநேரம் போவதே தெரியவில்லை.

ஒரு திருவிழா, ஒரு பயணம், ஒரு விபத்து. இதை வைத்துக்கொண்டு இவ்வளவு சுவையாகவும் அழுத்தமாகவும் ஒரு படத்தைக் கொடுக்க முடியுமா என வியக்க வைக்கிறார் இயக்குனர். மண்வாசனையுடனும் நுட்பமான செய்தியுடனும் கதை சொல்கிறார். ஆடு வெட்டுவதைத் தவறு என்று சொல்லவருகிறீர்களா என்று கேள்வியே எழுப்ப முடியாத அளவுக்குப் படம் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தைத் திரை அனுபவமாக மாற்றிவிடுகிறது.

ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான படத்தைக் கொடுத்திருக்கும் சுரேஷ் சங்கையாவுக்கு வாழ்த்துகள்.
மதிப்பு: 4/5

×Close
×Close