இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில், நடிகை ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் ‘90 எம்.எல்’.
தணிக்கைக் குழுவினரால் ‘ஏ சான்றிதழ்’ அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 90 எம்.எல் படத்தை எதிர்பார்த்தார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால் அதன் ட்ரைலரில் இடம் பெற்ற, இரட்டை அர்த்த வசனம், ஆபாச காட்சிகள் ரசிகர்களிடத்தில் நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தியது. இந்நிலையில் படம் வெளியாகி, பொது மக்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.
இது குறித்து சைக்காலஜிஸ்ட் அபிலாஷா தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். “பலருக்கு கஞ்சா பற்றிய விஷயங்களே தெரியாது. ஆனால் இந்த படத்தில் அது எத்தனை வகைகளில் கிடைக்கிறது என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இதனால், மற்றவர்களையும் இதனை பயன்படுத்த தூண்டும். மதுக்கடைகளை மூட சொல்லி நம்ம ஊர் பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் 90 எம்.எல் படம் முழுக்க பெண்கள் மது அருந்துகிறார்கள். அதுவும் மூடியிருக்கும் டாஸ்மாக்கை என்ன சொன்னால் திறக்க முடியும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ‘நான் தமிழ் பொண்ணு’ என்ற வசனத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் எந்த தமிழ் பெண்ணும் இப்படியான கலாச்சாரங்களுக்குள் செல்லவில்லை என்பதே உண்மை.
படம் முழுக்க மது, சிகரெட், இரட்டை அர்த்த வசனங்களால், நிரம்பி வழிகிறது. ஒரு பெண் தன்னுடைய தைரியத்தை இப்படியான விஷயங்களை செய்து தான் காண்பிக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. படத்தில் வரும் ஓவியா உட்பட மற்ற பெண்கள் எல்லாருமே ஹை-புரொஃபைலில் வாழ்கிறார்கள். ஆனால் யாரும் எந்த வேலைக்கோ செல்வதில்லை. அப்படியென்றால் அவர்களுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை இயக்குநர் சொல்லியிருக்க வேண்டும். காரணம் இதைப் பார்க்கும் சாதாரண பெண்கள் கூட பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போல, என்ற உணர்வுக்கு தள்ளப்படுவார்கள்.
சினிமா என்ற பொதுத்தளத்திற்கு நிறைய பொறுப்பும் உணர்வும் இருக்கிறது. நீங்கள் விளையாட்டுத்தனமாக வைக்கும் ஒரு காட்சியோ / வசனமோ பொது மக்களிடத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன், இது என்னுடைய வாழ்க்கை என ஒருவராலும் வாழ முடியாது. காரணம் உங்களுடைய சுதந்திரம் அடுத்தவரை வெகுவாக பாதிக்கும்.
அதுவும் இந்த படத்தை இயக்கியது ஒரு பெண் என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. 100 படங்களில் ஒரு படத்தை தான் பெண்கள் இயக்குகிறார்கள். இப்படியான சூழலில், உங்களுக்கு பொறுப்பு நிறைய இருக்கிறது. இந்த சமூகத்தை மெருகேற்றாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கும் விஷயங்களையாவது சீரழிக்காமல் இருப்பது உங்களுடைய கடமை” என சைக்காலஜிஸ்ட் அபிலாஷா தனது வீடியோவில் தெரிவித்திருக்கிறார். அதாவது இனிப்பான விஷமாக இந்தப் படத்தை வர்ணித்திருக்கிறார் அபிலாஷா.
அபிலாஷாவின் இந்த வீடியோவைப் பகிர்ந்த, தயாரிப்பாளர் தனஞ்செயன், “இயக்குநர் அனிதா உதீப்பும், தயாரிப்பாளர் உதீப்பும் டாக்டர் அபிலாஷாவின் இந்த நேர்மையான விமர்சனத்தைப் பார்த்து, அவர்களின் ’90எம்.எல்’ எப்படி சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள். இளைஞர்களிடையே விஷத்தைப் பரப்பி பணம் சம்பாதிக்காதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த அனிதா, ”தனஞ்ஜெயன் அங்கிள். நான் ‘Mr.சந்திரமௌலி’ போன்ற சமூகத்துக்குத் தேவையான படத்தை எடுத்து அதில் கில்மா பாடல்களை வைக்கவில்லை. ’90 எம்.எல்’ வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் ‘சேட்டை’யில் பேசியதைப் போல அசிங்கத்தைப் பற்றி பேசவில்லை. பெண்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்” என்றார்.
இதற்கு பதிலளித்த தனஞ்செயன், “எனக்கு புரிகிறது ஆன்ட்டி. பலரால் இந்தப் படம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே அந்த வீடியோவைப் பகிர்ந்தேன். வலைப்பேச்சு விமர்சனத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். எங்கள் படங்களில் பெண்களை தரம் தாழ்த்துமாறு எந்த அசிங்கத்தையும் காட்டவில்லை. கவர்ச்சிப் பாடல்கள் இழிவில்லை. 90 எம்.எல் படத்தில் இருக்கும் வக்கிரமான வசனங்களும், காட்சிகளும் இழிவுதான்” என்றார்.
இப்படியான ட்விட்டர் சண்டையில், 90 எம்.எல் படத்துக்கு எதிராக பலரும், ஆதரவாக சிலரும் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
தவிர, பொது மக்களிடத்திலும் இதற்கு பெரும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே சமூகத்தை சீரழிக்க பல வழிகள் இருக்கின்ற நிலையில், பலராலும் கூர்ந்து கவனிக்கப்படும் சினிமாவிலும் ஓப்பனாக சில விஷயங்களை கூறுவதால், தங்களது பிள்ளைகளை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.