பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும், ‘பரியேறும் பெருமாள்’ சர்ச்சையை கிளப்பிய மாதொருபாகன் நாவலின் சினிமா வடிவமா? என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து, அனைவரும் கவனிக்கும் இடத்தில் இருக்கிறார். அட்டக்கத்தி,மெட்ராஸ் படங்களில் ஒரு சாதாரண இயக்குநராக அறியப்பட்டவர். ரஜினியின் கபாலியால் கண்டம் தாண்டிய கண்கள் பார்க்கும் பார் அறியும் ரஞ்சித்தாக மாறிவிட்டார்.
மக்களின் பல்ஸ் தெரிந்த சூப்பர்ஸ்டாராக 40 வருடங்கள் இருக்கும் ரஜினியையே காம்ரமைஸ் இல்லாமல் இயக்கிய இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அது மட்டுமல்ல, இதுவரை சாதிய வட்டத்தில் சிக்காமல் அனைத்து தரப்பு மக்களின் ஹீரோவாக இருந்த ரஜினியை தன்னுடைய கருத்தியல் சிந்தனை வட்டத்தில் உள்ளிறக்கியவர்.அது சரியா? தவறா? என்னும் விவாதம் சினிமாவை தாண்டி நடக்கிறது.
ஒரு கருத்தை விவாதிப்பதே தவறு என்னும் சிந்தனையில் இருந்த நிலையில் திரையில் அதுவும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியை வைத்து அவர் இயக்கிய இரண்டு படங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களை ரஜினியின் வாயாலேயே வசனம் பேசவைத்தவர்! அதை ரஜினி ஒப்புக்கொண்டது ரஞ்சித்தின் சிந்தனைக்கு கிடைத்த வெற்றி.
இந்தச் சூழலில்தான் பா.ரஞ்சித் தனது சொந்த பொறுப்பில் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் புதிய படம் தயாரிக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கு, ‘பரியேறும் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுவிட்டது. எழுத்தாளர் மாரி செல்வராஜ் படத்தை இயக்குகிறார்.
பரியேறும் பெருமாள் என்கிற பெயரே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது. பரி என்பதற்கு குதிரை என்று பொருள்! ஆக, காலா, கபாலியில் இடையிடையே இந்துத்வ அரசியலை சாடிய பா.ரஞ்சித் தனது சொந்தப் படத்தில் நேரடியான முழுவேக தாக்குதலுக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவிட்டிருப்பதாக கண்டனங்கள் எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதேமாதிரியான அதிரடி கருத்துக்களுடனேயே பரியேறும் பெருமாள் தயாராகி வருவதாக தெரிகிறது.
ஒன்று மட்டும் நிச்சயம்... மாநில அளவில் இல்ல, மொத்த இந்தியாவையும் உலுக்குகிற, திரும்பிப் பார்க்க வைக்கிற படமாக பரியேறும் பெருமாள் இருக்கும் என்கிறது, தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான வட்டாரம்!
திராவிட ஜீவா