தமிழ் சினிமாவில் தலித் அரசியலை, பண்பாட்டை திரைப்படங்களாக எடுத்துவரும் இயக்குனர் பா.இரஞ்சித், தனது படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ரைட்டர் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது: “என்னை நிறைய பேர் பாராட்டினார்கள். அதற்காக எல்லாம் நான் வேலை செய்யவில்லை. எனக்கென நிறைய வேலைத் திட்டங்கள் இருக்கிறது. அதற்காக நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அந்த வேலை ரொம்ப சுயநலமாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அதில் இவர்களோடு சேர்ந்து என்னால் முடிந்த அளவு பங்கு பெற்று பேசிக்கொண்டிருக்கிறேன். இது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். இங்கே நான் சேவை செய்யவோ ஒருவருக்கு உதவி செய்யவோ நான் வரவில்லை. என்னுடைய கடமையை நான் செய்கிறேன். என்னை புகழ்வது அசௌகரியமாக இருந்தது. என்னை புகழ்வது உண்மையில் எனக்கு புடிக்கவில்லை.
அதிதி, அஸ்வினி ஆகியோருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்றால் என்னுடைய அரசியல் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொள்ளாவிட்டால், என்னுடைய அலுவலகலத்துக்குள்ளேயே அவர்கள் வரமாட்டார்கள். என்னை ஒருவர் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால் நான் பேசுவது ஏதோ ஒரு வகையில் சரி என்று ஒத்துக்கொள்கிறவர்கள்தான் என்னிடம் வந்து பேசமுடியும். ஏனென்றால், என்னுடைய அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். என்னுடைய அலுவலகக் கதவை நான் எப்போதும் யாருக்காகவும் மூடியது இல்லை. அவர்களுக்கான இடம் இருக்கிறது. அங்கே வருவதற்கு அவர்களுக்கு ஒரு தைரியம் வேண்டும்.
என்னுடைய திரைப்படங்களில் தயாரிப்புகளில் இருந்து அரசியல் சரித்தன்மை இல்லாத படங்கள் போகக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறேன். அதனால், கதைத் தேர்வில் உறுதியாக இருக்கிறேன். சினிமா எடுப்பதற்கும், சினிமா இயக்குவதற்கும்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். அதற்கு காரணம் முழுக்க முழுக்க என்னுடைய அரசியல் சித்தாந்தம்தான். எனக்கான இடம் என்ன, நான் யார் இங்கே, என்னை ஏன் இப்படி சித்தரிக்கிறீகள், அப்ப எனக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அது ஏன் இங்கே பிரதிபலிக்கவில்லை. நீங்கள் எதையெல்லாம் மறுத்தீர்களோ அதையெல்லாம் நான் பேசப் போகிறேன். அந்த நோக்கத்துடன்தான் இருக்கிறேன். என்னுடைய வேலைத் திட்டங்களும் அதையொட்டிதன் இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக்கொண்டேன். நான் ஒரு கட்டுப்பாடுடன்தான் இருக்கிறேன். அந்த கட்டுப்பாட்டை உடைத்து யோசிப்பதில்லை.
இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள் பார்க்கிறபோது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கான வேலைகள் நிறைய இருக்கிறது.
முதல் படம் பண்ணுகிறபோது, இருந்த நெருக்கடிகள், திரைக்கதைகளில் நான் செய்து விஷயங்கள், செய்த மாற்றங்கள் எல்லாம் எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. படம் எடுத்த முடித்ததும் படம் பார்த்தவுடன் வெளியான கருத்து எல்லாம் என்னை மன ரீதியாக பாதிக்க வைத்தது. அதனால், நான் தயாரிக்கிற படங்களில், எனது திரைப்படங்களில அதைப் போல கொடுக்க கூடாது என்று நினைத்தேன். அவர்கள் நினைக்கும் கருத்தை சுதந்திரமாக எடுக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். அப்படிதான், பரியேறும் பெருமாள், குண்டு, சேத்துமா, குதிரைவால் பண்ணியிருக்கிறேன். ரைட்டர் படத்தைத் தொடர்ந்து இந்த படங்களும் வெளியாகும்.
பரியேறும் பெருமாள், குண்டு படத்தைப் போல ரைட்டர் படத்தைப் பார்த்தபோது பெரிய திருப்தி ஏற்பட்டது.
கனி அண்ணன் (சமுத்திரகனி) மேல எனக்கு ஒரு பெரிய ஆர்வம் இருந்தது. ஒரு நடிகராக இயக்குனர் என்ன சொல்கிறோமோ அதை மட்டும் செய்வார். எனக்கு எப்போதுமே பெரிய நடிகர்கள் இடம் வேலை செய்வதில் பெரிய ஈடுபாடு இல்லை. நாம் சொல்வதை அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அதட்டியோ திட்டியோ வேலை வாங்க முடியாது. அதனால், நடிகர்கள் தேர்வில் நம்முடைய மனநிலைக்கு ஒத்துக்கொள்கிறவர்களாக தேர்வு செய்வேன்.
கால்ஷீட் டைம் பார்த்து வேலை செய்பவர்கள் மற்றும் பிஸியாக இருக்கிறவர்களிடம் வேலை செய்ய முடியாது. அது பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும். கனி அண்ணன் மீது எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது. நான் ரைட்டர் இயக்குனர் ஃபிராங்க்ளினிடம் கனி அண்ணனை நடிக்கை வைக்கலாம் என்று சொன்னேன். கதையை படித்து முடித்த பிறகு கனி அண்ணன் செம சூப்பராக இருக்கிறது. நான் செய்கிறேன் என்று கூறினார். இந்த படத்தில் கனி அண்ணன் தங்கராஜாக வாழ்ந்திருக்கிறார். அவருடைய கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.
மெட்ராஸ் படம் முடித்த பிறகு ஹரிக்கு ஒரு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஜானி பெரிய அளவு ரீச் ஆச்சு. கேரக்டர் எந்த அளவுக்கு ரீச் ஆச்சோ அதே அளவுக்கு என்படத்தில் நடிக்கிறவர்களுக்கு சிக்கலும் உருவானது.
ரஞ்சித் படத்தில் வேலை செய்தால் இவர்கள் எல்லாம் இப்படிதான் இருப்பார்கள் என்று நிறைய இடங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய உதவி இயக்குனர்கள் வெளியே போய் கதை சொல்லப் போகிறபோது, உங்க டைரக்டர் இப்படிதான் பேசுவாராமே, இப்படிதான் கதை எடுப்பீங்களா, நீங்களும் இப்படிதான் பேசுவீங்களா கேட்டிருக்கிறார்கள். என் படத்தில் நடிப்பவர்களைக்கூட என்னை சேர்ந்தவர்களாக யோசிக்க ஆரம்பித்து நிறைய பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. அதை யார்கிட்ட வேண்டுமானாலும் நீங்கள் தனியாக பேசி கேட்டுக்கொள்ளலாம். அதை இல்லை என்று எல்லாம் யாரும் வெளியே சொல்ல முடியாது. இது ரொம்ப அப்பட்டமான உண்மை. என் படத்தில் வந்து வேலை செய்கிற டெக்னீஷியன், நடிகர்கள் என எல்லோரையும் வட்டமிடுகிறார்கள். அதனால், அவர்களை ட்ரீட் பண்ணுகிற விஷயமே மிக மோசமாக இருக்கிறது.
அதைப் பற்றி என்னிடம் சொல்கிறபோது, அதையெல்லாவிடுங்கள், தொடர்ந்து வேலை செய்யுங்கள். நம்முடைய வேலை அனைவராலும் ஏற்றுக்கொள்கிறபோது அப்போது எல்லோருமே நம்மைத் தேடி வருவார்கள். அதில் ரொம்ப பாதிக்கப்பட்டது ஹரிதான். அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். ஹரி ஒரு பயங்கரமான நடிகர். ஜானி கேரக்டரை ரொம்ப அனாயாசமாக செய்தான். அந்த கேரக்டராகவே வாழந்திருப்பான். ஏன். அவனுக்கு அதற்கு பிறகு, அங்கீகாரம் கிடைக்கவில்லை. நிறைய யோசித்திருக்கிறோம். வெற்றிமாறன் படத்தில், நடித்திருக்கிறான். அவருக்கும் ரொம்ப புடிச்ச நடிகர் அவன். ” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.