2024-ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் தங்கலான் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு கோப்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகி இருந்தாலும், விக்ரம் சோலோ ஹீரோவாக நடித்து வெளியான கடைசி படம் கோப்ரா தான். அதன்பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்துள்ளார்.
2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் தங்கலான் படம், கடந்த ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் தாமதமானதால் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப்போனது. இந்த படம் குறித்து ஏற்கனவே ஒரு டீஸர் வெளியிடப்பட்டாலும், இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே தங்கலான் படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை தயாரிப்பாளர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கை, உறுதிப்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கேஜிஎஃப் திரைப்படத்தின் கதைக்களமான கோலார் தங்க வயல் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இப்பகுதியையும் அங்குள்ள மக்களையும் சுரண்டியபோது நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.
இந்த சம்பவங்களின் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட, தங்கலான், சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் எதிர்கொள்ளும் போராட்டங்களை பற்றி எடுத்து கூறும் வகையில் இருக்கும் அதிரடி ஆக்ஷன் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் தவிர, இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் மற்றும் தமிழ்த் துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட தயாராக உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் 2024 ஏப்ரலில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“