அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. இப்படி இந்த ஆண்டில் அஜீத்குமாரின் 2 படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது.
அந்த வரிசையில் இன்னும் சர்ஃப்ரைசாக அஜீத்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது. இந்நிலையில் தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் அஜித்குமார் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பத்ம விருதை பெறுவதில் நான் ரொம்பவே பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவத்துக்காக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமில்லை. இதனை சாத்தியப்படுத்திய பலரது உழைப்பும் இதில் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிப்பிற்குரிய திரைத்துறையினர், நண்பர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. அவர்களது உத்வேகம், ஒத்துழைப்பு, ஆதரவு எனது பயணத்தில் உறுதுணையாக இருந்தன. அதுமட்டுமின்றி எனது விருப்பமாக இருந்த மற்ற விஷயங்களிலும் எனது கவனம் இருப்பதற்கு உதவியது. பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு கொடுத்த மோட்டார் ரேஸிங் நண்பர்கள், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல்,ரைஃபிள் ஷூட்டிங் நண்பர்களுக்கும் நன்றி.
அதேபோல் மெட்ராஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய தேசிய ரைஃபிள் சங்கம், சென்னை ரைஃபிள் கிளப் எனக்கு ஊக்கமளித்ததற்கும் நன்றி. எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். இந்த நாளை காண்பதற்கு எனது மறைந்த தந்தை இப்போது இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் அவரது வழிகாட்டுதல் நான் செய்யும் அத்தனையிலும் இருக்கிறது.
எனது அம்மாவின் அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த 25 ஆண்டுகளில் எனக்கு துணையாக இருக்கும் என் மனைவியும், தோழியுமான ஷாலினி எனது பக்கபலம்.
எனது குழந்தைகள் அனௌஷ்கா, ஆத்விக் ஆகியோர் எனது பெருமை மற்றும் ஒளி. எனது ரசிகர்கள், ஆதரவாளர்கள்,நலம் விரும்பிகள் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பும் ஆதரவுமே என்னை அர்ப்பணிப்புடன் இருக்க உந்துகிறது. இந்த விருது என்னுடையது போலவே உங்களுக்கும் உரியது. அனைவருக்கும் நன்றி. நேர்மையுடனும், ஆர்வத்துடனும் செயல்பட நான் உறுதி பூண்டிருக்கிறேன். நான் உற்சாகமாக இருப்பது போலவே அனைவரும் உற்சாகமாக இருக்க வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.