பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்பு, வெளியான பத்மாவத் திரைப்படம் 100 கோடி வசூலைத் தாண்டி திரையரங்குகளில் சாதனை படைத்து வருகிறது.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பத்மாவத்’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதியன்று திரைக்கு வந்தது. முதலில் ‘பத்மாவதி’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ராணி பத்மாவதி கதாபாத்திரம் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்புகள் படம் வெளியாவதற்கு தடையாக போராட்டத்தில் இறங்கினர்.
அதன் பின்பு, தணிக்கை குழுவின் அறிவுறுத்தலின் படி, படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, ’பத்மாவத்’ என்று பெயர் மாற்றப்பட்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது, இந்த திரைப்படம் நாடு முழுவதும் ஜனவரி 25 ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திரைப்படம் வெளிவராது என்று அம்மாநில அரசுகள் அறிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பின. அதன் பின்பு, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் படக்குழுவிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதையடுத்து, இறுதியாக பத்மாவத் திரைப்படம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தீபிகா படுகோனா, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் கூட்டணியில் வெளிவந்த பத்மாவத் திரைப்படம், முதல் நாளிலே நல்ல விமர்சனங்களை பெற்றது. படத்தில் நடித்தற்காக தீபிகாவின் உயிருக்கு கோடி கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தில் தீபிகாவின் நடிப்பு, ராணி பத்மாவதியை தெய்வத்திற்கு நிகராக காட்டப்பட்டிருப்பதாக முன்னணி பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. அதன் பின்பு, போராட்டங்கள் முற்றிலுமாக குறைந்தன. முதல் நாளில் 19 கோடி வசூலித்து சாதனை படைத்தது 'பத்மாவத்’இரண்டாம் நாள் வசூல் 32 கோடி வசூல் செய்யது. 4 ஆவது நாளான இன்று, 100 கோடியைத் தாண்டி வசூல் சாதனைப் படைத்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும், பத்மாவத் திரைப்படத்துடன் வெளிவந்த தமிழ் படங்களைக் காட்டிலும், தமிழ் மொழிப்பெயர்ப்பு படமான பத்மாவத் வசூலில் சாதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங், கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபில் புதிய சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவிலும் பத்மாவத் திரைப்படம் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்து மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.