Pandian Stores 2 announced Deepawali prizes: விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளில் ஒளிபரப்பான சில சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அதனால், விஜய் டிவி அந்த சீரியல்கள் நிறைவடைந்தாலும் அதன் அடுத்தடுத்த சீசன்களை ஒளிபரப்பி வருகிறது. சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, மௌன ராகம், பாரதி கண்ணம்மா சீசன் 2 வரிசையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலும் இணைந்துள்ளது.
விஜய் டிவியில 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆயிரம் எபிசொடுகளைக் கடந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி ரசிகர்களை டிவி முன்னால் கட்டிப்போட்டு வைத்திருந்தது. கூட்டுக் குடும்பமாக வாழும் சகோதரர்களின் பாசத்தைக் கூறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமாராஜ் சதீஷ், குமரன், சரவண விக்ரம், லாவண்யா, காவ்யா அறிவுமணி, விஜே தீபிகா, சாய் காயத்ரி, வைஷாலி தனிகா, சாந்தி வில்லியம்ஸ், ஷீலா என என பலர் நடித்திருந்தனர். அவ்வப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்யலட்சுமி சீரியலின் மகா சங்கமும் நடைபெற்றது. இந்த சீரியல் கடந்த மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2வது சீசனை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, வி.ஜே. கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி, ஹேமாராஜ் சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், விலாசினி, சத்யா சாய் கிருஷ்ணன், ரிஹானா, ஷாலினி பிரபு, அஜய் ரத்னம் என பலரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குழு, ரசிகர்களுக்கு ஸ்வீட்டான பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சீரியல் இயக்குநர்கள் எப்படி தீபாவளி தொடர்பான காட்சிகளை வைத்து ஒளிபரப்பலாம் என திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குழு, ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட்டான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 6-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலை பாருங்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலளிப்பவர்களில் தினம் 100 பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து இனிப்பு பலகாரங்கள் எல்லாம் தீபாவளி பரிசாக உங்கள் வீட்டுக்கு வரப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரியல் பாருங்க, தீபாவளி பரிசு அள்ளுங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“