பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் சின்னத்திரை வட்டாரத்தில் பிரபலமான நடிகை சுஜிதா தனுஷ் சமீபத்தில் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்றவர் சுஜிதா தனுஷ். கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்’ விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் முதல் (அக்டோபர் 30) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது.
இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்த சுஜிதா தனுஷ் இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள சுஜிதா தனுஷ் இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனிடையே தனது திருமண நாளை முன்னிட்டு தனது கணவருக்கான உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு தனுஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட சுஜிதாவுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த சுஜிதாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா தனுஷ் சீரியல் போலவே பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனது 13-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“