பண்டிகை : விமர்சனம்

பண்டிகை தமிழ் படத்தில், சென்னை மாநகரத்தின் இருண்ட பக்கங்களையும், அதன் கொடுரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

ஆதவன்

பண்டிகை என்னும் மிகவும் அறிமுகமான தலைப்பை வைத்துக்கொண்டு நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு உலகத்தைக் காட்டுகிறார் இயக்குநர் ஃபெரோஸ். அதீதமான பணத்தாசை, பிறர் துன்பத்தில் இன்பம் காணும் இயல்பு என மனித இயல்பின் இருண்ட பக்கங்களைச் சென்னையின் இருண்ட முகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

பெற்றோரின் மரணத்துக்குப் பிறகு கஷ்டங்களையும், அவமானங்களையும் அனுபவித்து வளர்ந்த வேலு (கிருஷ்ணா) ஒரு ஸ்டார் ஹோட்டலில் சர்வராகப் பணிபுரிகிறான். பிறர் தன்னை மதிக்கும்படியான கவுரவமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் அவனுடைய அதிகபட்சமான கனவு. விரைவில் வெளிநாட்டுக்குச் சென்று நன்றாகச் சம்பாதித்து கவுரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது அவன் திட்டம்.

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறான் முனி (சரவணன்). அதிகப் பணத்தை நாடி, சீட்டாட்டாத்திலும் கிரிக்கெட் பெட்டிங்கிலும் தன் சொத்து முழுவதையும் இழக்கிறான். இவனுடன் வேலுவுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. வேலுவுக்குப் பண நெருக்கடி வரும்போது பந்தயச் சண்டை, கிரிக்கெட் பெட்டிங் ஆகியவற்றை முனி அறிமுகப்படுத்துகிறான். இந்த வேலைகளில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் விரைவிலேயே இருவரும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலிருந்து மீள, நிழல் உலகின் தலைவரான தாதாவிடமே கைவைக்கத் திட்டமிருகிறார்கள். அந்தத் திட்டத்தில் வெற்றி கிடைத்ததா, தாதாவிடமிருந்து அவர்கள் தப்பினார்களா, எனப்துதான் கதை.

இரண்டு பேரை மோதிக்கொள்ள விட்டு அவர்கள் மீது பந்தயம் கட்டி, அவர்கள் இருவரும் ரத்தம் கொட்டக் கொட்டச் சண்டை போடுவதைப் பண்டிகை போலக் கொண்டாடும் குரூரமான மனிதர்களை ‘பண்டிகை’ நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பந்தயச் சண்டை, கிரிக்கெட் பெட்டிங், நிழல் உலக வலைப்பின்னல் ஆகியவற்றை ஒரு சாமானியனின் வாழ்க்கையின் பயணத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பந்தயச் சண்டைக் காட்சிகள் மனம் பதைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகனின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளால் ஏற்படும் புதிய சிக்கல்களும் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் காட்டப்படுகின்றன.

முதல் பாதியைப் பந்தயச் சண்டை, சூதாட்டம் ஆகியவை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இரண்டாம் பகுதி முற்றிலும் திசை மாறி, கொள்ளை, பண வேட்டை, சண்டை எனச் செல்கிறது. ஒரு சில திருப்பங்கள் கணிக்கக்கூடியவையாக இருந்தாலும், காட்சிப்படுத்திய விதத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கொள்ளையடிக்கும் காட்சியில் விறுவிறுப்பு இருந்தாலும் பந்தயச் சண்டை, வட்டித் தொழிலின் குரூரம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் இது பலவீனமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை நடக்கும் வீட்டில் ‘பிளாக்’ பாண்டி பிஸ்கெட் சாப்பிடும் காட்சி எரிச்சலூட்டுகிறது. பறிகொடுத்த பணத்தைத் தேடுவதற்கு நிழல் உலக மன்னர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அச்சமூட்டுகின்றன. கடைசியில் வரும் அந்த இரட்டையர்கள் மிரட்டி எடுக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் உள்ளன.

பாத்திரங்களைச் செதுக்கிய விதமும் சிக்கனமான வசனங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. வேலு, முனி போன்றவர்களின் சிக்கல்களுக்கான காரணங்களும் நன்கு நிறுவப்பட்டுள்ளன. கருணாஸ் தப்பிக்கும் உத்தி, கொள்ளையடித்தவர்களை இரட்டையர்கள் கண்டுபிடிக்கும் விதம் எனச் சிறிய விஷயங்களும் கவனம் ஈர்க்கின்றன.

திருட்டுக் காட்சியில் உள்ள லாஜிக் பிழைகள், அந்தக் காட்சியின் இடையே வரும் காமெடி, இரண்டாம் பாதியில் விழும் தொய்வு, காதல் விவகாரம், கடைசிக் கட்டத்தில் எல்லாமே வேகவேகமாக நடப்பது ஆகியவை படத்தின் பலவீனங்கள்.

கிருஷ்ணா மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவமானம், உறுதி, வேகம் ஆகியவற்றைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சரவணனும் தன் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ‘பிளாக்’ பாண்டி, நிதின் சத்யா, மதுசூதன ராவ் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனந்திக்குக் கதையில் எந்த வேலையும் இல்லாவிட்டாலும் அவர் கொடுத்த வேலையைக் குறைவைக்காமல் செய்திருக்கிறார்.

ஆர்.ஹெச். விக்ரமின் இசையில் பின்னணி இசை கன பொருத்தம். பாடல்கள் பரவாயில்லை. அரவிந்தின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்தத்துக்கும் அழுத்தத்துக்கும் வலு சேர்க்கிறது.

சென்னை நகரம், மனித இயல்பு ஆகியவற்றின் இருண்ட பக்கங்கள் சிலவற்றை விறுவிறுப்பான

  • கதையுடனும் அழுத்தமான காட்சிகளுடனும் காட்டும் ‘பண்டிகை’ கொண்டாடப்பட வேண்டிய படம்.
  • ×Close
    ×Close