கருணாநிதி புகழை பேசும் வகையில் கோவா சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் பராசக்தி படம் திரையிடப்படுகிறது. இது தமிழர்களை பெருமைபடுத்தும் செயலாக அமைந்துள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவராக இருந்த மு. கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். முத்தமிழ் கலைஞர் என போற்றப்படும் இவர், அரசியல் களத்தில் முழுமையாக இறங்குவதற்கு முன்பு நாடகங்களுக்கு வசனக் கர்த்தாவாக திகழ்ந்தார். மேலும் பின் வரும் நாட்களில் திரைப்படங்களிலும் தனது தமிழால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி திரைப்படம்
அத்தகைய தமிழ் தொண்டனின் போற்றப்படும் தமிழ் திருப்பணிகளில் ஒன்று தான் பராசக்தி படம். கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, இவரின் புகழை போற்றும் வகையிலும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் கோவா சர்வதேச திரைப்பட விழா பரா சக்தி படத்தை திரையிடுகிறது. இந்த நிகழ்வு, கருணாநிதி, அவர் குடும்பம் மட்டுமின்றி அவரின் தொண்டர்களுக்கும் பெருமைப்படும் தருணமாக அமைந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு நடக்கும் இந்த திரைப்பட விழாவில் இந்தியாவில் மறைந்த பல கலைஞர்களுக்காக அஞ்சலி செலுத்தும் முறையாக அவர்களின் படங்கள் திரையிடப்படுகிறது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.