விஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் 'டூ மச்' - பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு?

ஒரு மழையால் வீடு முழுதும் நீர் ஓடும் ஒரு பக்க வாழ்க்கையும், அதே மழையை சோபாவில் ரசிக்கும் ஒரு பக்க வாழ்க்கையுமே படம்

ஆஸ்கர் விருது விழாவில் தென்கொரிய படமான ‘பாரசைட்’ 4 விருதுகளை வென்றது. ‘என்னய்யா இப்படி ஒரு படத்தை நாம கேள்விப்பட்டதே இல்லையே’-னு சினிமா ஆர்வலர்கள், விமர்சகர்கள் முண்டியடித்து படத்தைப் பார்க்க, ரசிகர்களோ ‘நாங்க எப்போதுமே உங்களுக்கு “மாஸ்டர்” தான்’ என்ற மோடில், ‘இது தளபதி விஜய் படத்தின் காப்பி டோவ்’-ன்னு ஒரு போடு போட ஆடிக் கிடக்கிறது ஆஸ்கர்.

விழாவில் சிறந்த படத்துக்கான போட்டியில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், 1917, ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட படங்கள் இருந்தன. இதில் பாராசைட் தென்கொரியா படம். மற்றவை ஹாலிவுட் படங்கள். வழக்கம்போல் ஹாலிவுட் படம்தான் இந்த முறையும் சிறந்த படமாக தேர்வாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு போங் ஜோன் ஹோ இயக்கிய பாரசைட் சிறந்த படமாக தேர்வானது. அத்துடன் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம் என மொத்தம் 4 விருதுகளை பாராசைட் வென்றது.

விஜய் படத்தை காப்பியடித்த படத்திற்கா ஆஸ்கார் விருது? : பரபரக்கும் பாரசைட் சர்ச்சை

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய்யின் ‘மின்சாரக் கண்ணா’ படத்தின் காப்பி என்று விஜய் ரசிகர்கள் மல்லுக்கட்டிக் கட்டிக் கொண்டிருக்க, பாரசைட் படத்தில் அப்படி என்ன தான் இருக்குன்னு சுருக்கமா பார்ப்போம்,

சுருக்கமா சொல்லனும்னா “வசதிக்கும் ஏழைமைக்கும் உள்ள வித்தியாசம் தான் ‘பாராசைட்’ படம்”. இந்த வேறுபாட்டை இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ ஆழமான திரைக்கதையோடு சொல்லியுள்ளார்.

பாராசைட் = ஏழ்மை குடும்பம் “கிம்” + வசதியான குடும்பம் “பார்க்”

வறுமையை போக்கி கொள்ள கிம் குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பொய் சொல்லி பார்க் வீட்டிற்கு வேலைக்கு நுழைகின்றனர். பின் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் படம்(பாடம்) இருக்கும்.

ஒரு பக்க சின்ன பேஸ்மென்ட் வீட்டில் கழிவறை, அடுப்படி எல்லாம் ஓன்றாக உள்ள வீட்டில் கிம் குடும்பம் வசிக்கிறது. மறுபக்கம் அதே பேஸ்மென்ட் அளவில் பார்க் வீட்டின் குளியலறை இருக்கும். நினைத்து பார்க்க முடியாத வசதியில் பார்க் குடும்பம்.

ஜன்னல் காட்சிகள்: கிம் பேஸ் மேண்டில், ஜன்னல் வழியாக பார்த்தால் வழிப்போக்கர்கள் சிறுநீர் கழித்து விளையாடுவதும், கொசு மருந்து அடித்தால் வீட்டிற்கும் முழுதும் வரும்படியாக இருக்கும். பார்க் வீட்டினர் சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியாக மழை கொட்டும் அழகை ரசிப்பர்.

ஏற்றம் – இறக்கம்: இதில் முக்கியமான ஒன்று கிம் வீடு, அவர்கள் வாழும் இடம் எல்லாம் கீழ் நோக்கியே செல்லும். அவர்கள் குனிந்த வண்ணமே செல்லவேண்டி இருக்கும். பார்க் வீடு, தெரு எல்லாம் மேல் நோக்கி இருக்கும். இதன் மூலம் வேறுபாட்டை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

’போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ விஜய் சேதுபதி ஆவேசம் – காரணம் என்ன?

மழை: ஒரு மழையால் வீடு முழுதும் நீர் ஓடும் ஒரு பக்க வாழ்க்கையும், அதே மழையை சோபாவில் ரசிக்கும் ஒரு பக்க வாழ்க்கையுமே படம்.

துர்நாற்றம்: இது முக்கிய ஒன்று. படம் பார்த்தாலே மட்டுமே உணரமுடியும்.

கல்: கிம் குடும்பத்திற்கு பரிசாக வரும் கல் அதிர்ஷ்ட கல் என நமக்கு தோன்றும் ஆனால் அது அதற்கு அல்ல அது வெறும் கல் மட்டுமே என கிளைமக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.

50 நிமிடம் பின் வரும் திருப்பம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் முடிவு எதிர்பார்த்தது தான். முன்னாள் வீட்டு வேலை செய்பவர் பின் இருக்கும் கதையும் நம்மை சிந்திக்க வைக்குமே தவிர கோவப்பட வைப்பதில்லை. வறுமையின் கொடுமையும், தாழ்வுமனப்பான்மையும் சேர்ந்து ஒரு சக மனிதனுக்கு வரும் கோவமே கிம் கதாப்பாத்திரம் எடுக்கும் அந்த முடிவு(கிளைமேக்ஸ்).

இறுதியில் கிம்மின் மகன் கிம்மிற்கு எழுதும் கடிதத்தில் உள்ளவை எதிர்காலத்தில் நடக்குமா என தெரியாது? ஆனால் ஒரு ஏழையின் நம்பிக்கையாக இருக்கும். எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் பேஸ்மென்ட் வாழ் மக்களின் வாழ்க்கை அந்த நம்பிக்கையுடன் நகரும்.

வறுமையால் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த முடியாது. இதில் இது தவறு, அது தவறு என்று இல்லை. சில நேரங்களில் வாழ்க்கையில் எந்த திட்டமிடல் இல்லாமலும் சில விஷயங்கள் நடக்கவே செய்யும். முந்தைய படத்தை போல் ஏழ்மை மக்களுக்கான குரல் இந்தப்படத்திலும் பாங்க் ஜூன் ஹோ எடுத்துரைத்துள்ளார்.

படம் எப்படினா? படம் பார்த்தால் நீங்களே உங்களுக்குள் படத்தை பற்றி விமர்சனம் செய்துக்கொள்ள வைக்கும். படத்தின் கதை படத்தின் பெயருடன் கச்சிதமாக ஒத்துபோகும்.

விமர்சனம் – பத்மபிரியா, ஆக்கம் – அன்பரசன் ஞானமணி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close