Vijay Sethupathi : கடந்த வாரம் நடிகர் விஜய்யின் வீடு, பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் அலுவலகம், பைனான்சியர் அன்புச் செழியன் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது சமூக வலைதளங்களில் விஜய் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக செய்தி ஒன்று பரவி வந்தது. இதற்கு ‘போய் வேலை இருந்தா பாருங்கடா’ என ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
'பிகில்’ படத்தில் ரூ.300 கோடி லாபம் என்ற தகவலால் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ரூ.77 கோடி ரொக்கம், நகைகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் விஜய்யிடம் இருந்து ரொக்கமோ, நகையோ கைப்பற்றப்படவில்லை என வருமானவரி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய் வீட்டில் சோதனை நடைபெற்று வந்த சமயத்தில், கிறிஸ்துவக்குழுக்கள் விஜய் மூலமாக தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதை ஜேப்பியாரின் மகள் ரெஜினா இயக்கமாக முன்னெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை ஒரு தரப்பினர் பரப்ப, விஜய் ரசிகர்களோ அவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, மேற்கூறிய வதந்திக்கு ‘போய் வேற வேலை பாருங்கடா’ என கோபமாக பதிவிட்டுள்ளார்.
அந்த வதந்தியில், ”ஜேப்பியார் மகள் ரெஜினா, தமிழகத்தில் கிறிஸ்துவ மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே திரைத்துறையிலும் கிறிஸ்துவத்தைப் பரப்பும் விதமாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோரை வடபழனியில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியதாகவும், இதர திரைத்துறையினரையும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சில என்ஜிஓ அமைப்புகள் பல்வேறு கல்விக் குழுமங்கள் மூலம் பணம் வழங்கி வந்த நிலையில், அமித் ஷா மற்றும் மோடி விதித்திருக்கும் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தப் பணம் பிகில் படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.