பரியேறும் பெருமாள் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்க விடாமல் பட உலகம் தடுப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பரியேறும் பெருமாளுக்கு புதிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். செப்டம்பர் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது. கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் இந்தப் படம், சாதிய ஒடுக்குமுறைகளின் வலிகளையும், வேதனைகளையும் ஈரம் காயாமல் பிரதிபலித்திருக்கிறது.
சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய சீளுக்கு ஒரு அறுவை சிகிச்சையாக இந்தப் படத்திற்கு பாராட்டுகள் வந்தபடி இருக்கின்றன. படத்திற்கான கூட்டமும், கலெக்ஷனும் குறை வைக்கவில்லை. இதுவே சமூக மாற்றத்திற்கான சினிமாக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற ஒரு அம்சம்!
இப்படி எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில், பரியேறும் பெருமாளுக்கு புதிய சிக்கல் கிளம்புகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 1400 தியேட்டர்கள் இருக்கின்றன. படம் திரையிடும் நிலையில் உள்ள தியேட்டர்கள் சுமார் 1200! இவற்றில் பரியேறும் பெருமாளுக்கு கிடைத்த தியேட்டர்கள் 187!
பரியேறும் பெருமாளுக்கு முன்னதாக ரிலீஸ் ஆன சீமராஜா, சாமி 2, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் மெஜாரிட்டி தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தன. அப்போதைக்கு அதில் குறை சொல்ல ஒன்றுமில்லைதான்!
ஆனால் அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு சீமராஜா, சாமி 2 ஆகியவற்றுக்கு பெரிய கூட்டம் இல்லை. எனவே இந்தத் தருணத்தில் பரியேறும் பெருமாளை கூடுதல் தியேட்டர்களில் திரையிட பா.இரஞ்சித் தயாரானார். அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களை ‘லீஸ்’ அடிப்படையில் கைப்பற்றி வைத்திருக்கும் சில குறிப்பிட்ட பட அதிபர்கள், பரியேறும் பெருமாளுக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைக்க விடாமல் தடுத்து வருவதாக கூறுகிறார்கள். பழம்பெரும் நடிகர் ஒருவரின் குடும்பத்தினருக்கு நெருக்கமான பட நிறுவனமே இப்படி முட்டுக்கட்டை போடுவதில் முன்னணியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
தீவிர முயற்சிகளுக்கு பிறகு சற்றே தியேட்டர்கள் எண்ணிக்கை கூடியிருப்பதாகவும், இன்னமும் போதிய அளவில் கூடுதல் தியேட்டர்களுக்கு பரியேறும் பெருமாளை கொண்டு வர முடியாமல் திணறுகிறது பா.இரஞ்சித்தின் நீலம் புரடொக்ஷன்ஸ்! பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலாவுக்கும் வேறு வகையான முட்டுக்கட்டை விழுந்ததும், அதனால் ரிலீஸ் தள்ளிப் போனதும் வரலாறு!
முற்போக்கு சிந்தனையாளர்களால் வெகுவாக பாராட்டப்படும் பரியேறும் பெருமாளும் பா ரஞ்சித்தும் கலையாகவோ கலைஞன் ஆகவோ பார்க்கப்படாதவரை இதற்கு தீர்வு எட்டப்படுவது கடினம் .
திராவிட ஜீவா