ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ’பார்க்கிங்’ படத்தின் முழு விமர்சனம் இங்கே.
கதைக்களம்
ஐ.டி.யில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவியுடன் புது வீட்டில் மேல் போர்ஷனில் குடியேறுகிறார். கீழ் போர்ஷனில் ஏற்கனவே அரசு அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர் வாழ்ந்து வருகிறார். தனது மனைவிக்காக புது கார் ஒன்றை வாங்கும் ஹரிஷ் கல்யாண் அதனை வீட்டின் அருகில் பார்க் செய்கிறார். ஆனால் அதே இடத்தில் எம்.எஸ் பாஸ்கருடைய இது சக்கர வாகனமும் பார்க்கிங் செய்யப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட இதன் விளைவாக புது கார் ஒன்றை எம்.எஸ் பாஸ்கர் வாங்குகிறார். அதன்பிறகு இருவருக்கும் நடக்கும் ஈகோ கிளாஷ் தான் இந்த படத்தின் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்த படங்களிலிருந்து இப்படத்தின் நடிப்பு சற்று வேறுபட்டு அமைந்திருக்கிறது. இதுவரை சாக்லேட் பாய் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவருக்கு இப்படத்தின் வில்லத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தன்னுடைய அனுபவத்தையும், நடிப்பின் முதிர்ச்சியையும் பயன்படுத்தி வில்லத்தனத்தில் மற்றொரு பரிணாமத்தை திரையில் காட்டி இருக்கிறார் எம்.எஸ் பாஸ்கர். இருவருக்கும் இடையேயான ஈகோ கிளாஷ் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். நாயகி இந்துஜாவிற்கு நடிக்க போதிய இடம் இல்லை என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை
இரு நபர்களுக்கு இடையே நடக்கும் பார்கிங் பிரச்சினை எப்படி ஈகோ க்ளாஷாக மாறுகிறது என்கிற சிம்பிளான ஒன் லைன் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள பொழுதுபோக்கு படத்தை எப்படி கொடுக்க முடியும் என ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கம்.
சாம் சி.எஸ்யின் பாடல்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பொதுவாகவே அவரது படங்களில் பயங்கரமான பி.ஜி.எம்.கள் இருக்கும். ஆனால் இப்படத்தில் படத்திற்கு தேவையான அளவுக்கு சிம்பிளான இசையை கொடுத்திருக்கிறார்.
படம் எப்படி
இரண்டு டெனன்ட்டுக்கு இடையே நடக்கும் பிரச்சனையில் படத்தை தொடங்கி எப்படி எல்லாம் அதை கொண்டு செல்ல முடியும் என்பதை கடைசி வரை சுவராஸ்யமான படமாக கொடுத்துள்ள பட குழுவினருக்கு பாராட்டுக்கள்.
முதல் பாதி முழுவதும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் மிகவும் நேர்த்தியாக செல்கிறது. ஆங்காங்கே வரும் ட்விஸ்ட் ரசிகர்களை படத்திற்குள்ளேயே அமர வைக்கிறது. மேலும் இப்படத்தின் எமோஷனல் காட்சிகளை பல இடங்களில் நம்மால் கனெக்ட் செய்ய முடிகிறது. நாம் அன்றாட வாழ்வில் கடந்து செல்லும் ஒரு சிறு பிரச்சனை எப்படி எல்லாம் நம்முடைய வாழ்வை பாதிக்கிறது அது எப்படி சரி செய்யலாம் என்கிற சமூக கருத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சிம்பிளான படமாக இருந்தாலும் சிறப்பான படமாக "பார்க்கிங்" அமைந்திருக்கிறது
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.